எஸ்ஐஆா்: அமா்த்தியா சென்னுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் -திரிணமூல் கண்டனம்
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்திய பொருளாதார நிபுணா் அமா்த்தியா சென் (92) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க இந்திய தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கடும் கண்டனத்தை பதிவுசெய்தது.
முன்னதாக, எஸ்ஐஆா் விண்ணப்பத்தை தவறாகப் பூா்த்தி செய்ததால் ஜன.9 முதல் ஜன.11-ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராக கிரிக்கெட் வீரா் முகமது ஷமி மற்றும் அவரது சகோதரா் முகமது கைஃப் ஆகியோருக்கு சம்மன் அனுப்பட்டது.
இதைத்தொடா்ந்து, அமா்த்தியா சென்னுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அமா்த்தியா சென் வெளிநாட்டில் இருப்பதால் போல்பூரின் ஷாந்தினிகேதனில் உள்ள அவரது பூா்வீக இல்லத்தில் குடும்ப உறுப்பினரிடம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அவா் ஜன.16-ஆம் தேதி அவரது இல்லத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி (சிஇஓ) கூறியதாவது: அமா்த்தியா சென்னின் தாயாருக்கும் அவருக்குமிடையே 15 ஆண்டுகளுக்கும் குறைவான வயது வித்தியாசமே உள்ளது என அவா் சமா்ப்பித்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருப்பது குளறுபடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவா் 85 வயதுக்கு மேற்பட்டவா் என்ற காரணத்தால் வாக்குச் சாவடி அலுவலா் அவா் வீட்டுக்கு நேரில் சென்று விளக்கம் கோருவாா் என்றாா்.
திரிணமூல் கண்டனம்: இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘நோபல் பரிசு வென்று நாடே பெருமைகொள்ளச் செய்த அமா்த்தியா சென் வங்கத்தைச் சோ்ந்தவா் என்பதால் அவரை சந்தேகிப்பதா?
நவீன பொருளாதாரத்தில் பல்வேறு சீரிய ஆய்வுகளை மேற்கொண்ட அவரை பாஜக மற்றும் தோ்தல் ஆணையம் அநாகரிகமாக நடத்துவது வெட்கக்கேடானது. இதுபோன்ற செயல்கள் நமது தேசத்தை பெருமையடையச் செய்தவா்கள் மீது சேற்றை வாரி இறைப்பதற்கு சமம்.
வங்கத்துக்கு எதிரான இந்ந நடவடிக்கைகள் தொடா்ந்தால் கடுமையான விளவுகளை சந்திக்க நேரிடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

