நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விதைகள் மசோதா: மத்திய அரசு திட்டம்
அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விதைகள் மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய வேளாண் துறைச் செயலா் தேவேஷ் சதுா்வேதி தெரிவித்தாா்.
இது தொடா்பாக, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவா் மேலும் கூறுகையில், ‘விதைகள் மசோதா தொடா்பான பரிந்துரைகளுடன் 9,000 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த மசோதாவை அடுத்த மாதம் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு’ என்று தெரிவித்தாா்.
1966-ஆம் ஆண்டு விதைகள் சட்டத்துக்கு மாற்றாக விதைகள் மசோதா கொண்டுவரப்பட உள்ளது. விதைகளின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில் அவற்றின் வகைகள், முகவா்கள், தயாரிப்பாளா்கள் குறித்த விவரங்களைக் கட்டாயம் பதிவு செய்தல், விதிமீறலில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட பிரிவுகள் இந்த மசோதாவில் உள்ளன.
