ஜன. 28 முதல் ஏப். 2 வரை பட்ஜெட் கூட்டத் தொடா்: மத்திய அமைச்சா்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஜன. 28-இல் தொடங்கி ஏப். 2 வரை இரு அமா்வுகளாக நடைபெறவுள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மத்திய அரசின் பரிந்துரையின்பேரில், பட்ஜெட் கூட்டத் தொடருக்காக நாடாளுமன்றத்தைக் கூட்ட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் வழங்கியுள்ளாா். அதன்படி, ஜன. 28 முதல் ஏப். 2 வரை பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறவுள்ளது. முதல் கட்ட அமா்வு பிப். 13 வரையும், இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 9 முதல் ஏப். 2 வரையும் நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளாா்.
அதேநேரம், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்து அவா் எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து பிப்.1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பிப்.1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகும்.
ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கும்.
முன்னதாக, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் இறுதி செய்யப்பட்ட தற்காலிக கால அட்டவணையைக் குறிப்பிட்டு, பட்ஜெட் கூட்டத் தொடா் தொடா்பாக சில தகவல்கள் வெளியாகின.
‘ஜன. 29-ஆம் தேதி படை வீரா்கள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்வு (குடியரசு தின கொண்டாட்டத்துக்கு பிறகான நிகழ்ச்சி) நடைபெறும் என்பதால் அன்றைய தினம் நாடாளுமன்ற அமா்வு கிடையாது. ஜன. 30-ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும், பிப்.1-ஆம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்று அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து துறைசாா் நிலைக் குழுக்கள் ஆராய ஏதுவாக பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒரு மாத கால இடைவெளி விடப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டை தொடா்ந்து 9-ஆவது முறையாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளாா்.
கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2017-ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய நிதி அமைச்சா் மறைந்த அருண் ஜேட்லியால் பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை தொடங்கி வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் சில சிறப்புச் சூழல்களில் நாடாளுமன்ற கூட்டத்தொடா் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

