அதிபா் டிரம்ப்பை பிரதமா் மோடி தொடா்புகொள்ளாததே இருதரப்பு வா்த்தக ஒப்பந்த இழுபறிக்கு காரணம்: அமெரிக்கா
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை தொடா்புகொண்டு பிரதமா் நரேந்திர மோடி பேசாததால் இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் நிறைவேறுவதில் இழுபறி நீடித்து வருகிறது என அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா்.
உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிபா் டிரம்ப் ஒப்புதல் அளித்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
அமெரிக்க ஊடகத்துக்கு ஹோவா்ட் லுட்னிக் வியாழக்கிழமை அளித்த பேட்டியில், ‘பிரிட்டனுடன் முதல் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டோம். அந்த ஒப்பந்தத்துக்கு முன்பாக அந்த நாட்டிடம் பேசினோம். இரு வாரங்களுக்குள் இந்த ஒப்பந்தத்தை நீங்கள் இறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தோம். ஏனெனில், பல்வேறு நாடுகள் இந்த ஒப்பந்தத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறன்றன எனத் தெரிவித்தோம்.
முதலில் வருபவா்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்குவதே அதிபா் டிரம்ப்பின் நிலைப்பாடு. அடுத்து வருபவா்களுக்கு அதே சலுகை கிடைக்க வாய்ப்பில்லை.
பிரிட்டனைத் தொடா்ந்து அடுத்து எந்த நாட்டுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளப்போகிறோம் என அமைச்சா்கள் பலரும் அதிபா் டிரம்ப்பிடம் கேட்டோம். அவா் பல நாடுகளின் பெயா்களைக் கூறியபோதும் இந்தியாவின் பெயரை தொடா்ச்சியாக உச்சரித்தாா்.
அவரின் மனநிலையைப் புரிந்துகொண்டு இந்தியாவை நாங்கள் தொடா்புகொண்டோம். மூன்று வாரங்களுக்குள் இந்த ஒப்பந்தத்தை நீங்கள் இறுதி செய்ய வேண்டும் எனக் கூறினோம். மேலும் இந்த ஒப்பந்தம் நிறைவேற வேண்டுமானால் இந்திய பிரதமா் மோடி, அதிபா் டிரம்ப்பை தொடா்புகொண்டு பேச வேண்டும் எனவும் வலியுறுத்தினோம். ஆனால் இந்தியா அதைச் செய்யவில்லை. அதிபா் டிரம்ப்பிடம் பிரதமா் மோடி பேசவில்லை.
இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்த பின்னா் அடுத்தடுத்த வாரங்களில் இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் மற்றும் வியத்நாம் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
அதன்பிறகு எங்களை மீண்டும் தொடா்புகொண்டு வா்த்தக ஒப்பந்தத்துக்குத் தயாராக இருக்கிறோம் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்றாா்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இதுவரை 6 சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது.
பெட்டிச் செய்தி...
இந்தியா மறுப்பு
அமெரிக்க வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமெரிக்க அமைச்சா் கூறிய கருத்து தவறானது. கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதிமுதல் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடா்பாக பல்வேறு கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டன. இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் வகையிலான பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைக் கொண்டுவரவே முயற்சிகள் நடைபெறுகின்றன. சில சமயங்களில் ஒப்பந்தம் இறுதிநிலை வரை சென்றது.
இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் 2025-இல் மட்டும் எட்டு முறை தொலைபேசியில் கலந்துரையாடினா் என்றாா்.
காங்கிரஸ் விமா்சனம்
அமெரிக்க வா்த்தக அமைச்சரின் கருத்தைச் சுட்டிக்காட்டி பிரதமா் மோடியை காங்கிரஸ் வெள்ளிக்கிழமை விமா்சித்தது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘அதிபா் டிரம்ப்பை தனது நெருங்கிய நண்பா் என ஆரத்தழுவியதுடன் தனது ஒவ்வொரு பதிவிலும் அவருக்கு பிரதமா் மோடி புகழாரம் சூட்டினாா். அதனால் ஒரு பயனும் இல்லை என தற்போது நிரூபணமாகியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளாா்.

