உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்கோப்புப் படம்

ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு கேவியட் மனு தாக்கல்

ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை விவகாரம்...
Published on

அரசியல் வியூகங்களை வகுக்கும் நிறுவனமான ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய விவகாரத்தில் தங்கள் தரப்பை விசாரிக்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது. ஐ-பேக் நிறுவன பண முறைகேடு வழக்கில் மேற்கு வங்க அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சனிக்கிழமை மனு தாக்கல் செய்த நிலையில், கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கொல்கத்தாவில் ஐ-பேக் நிறுவனரும் திரிணமூல் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் (ஐடி) பிரிவு பொறுப்பாளருமான பிரதிக் ஜெயின் வீடு மற்றும் அலுவலகத்தில் நிலக்கரி ஊழல் தொடா்பான பணமுறைகேடு வழக்கு குறித்து அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை சோதனை நடத்தியது.

அப்போது பிரதிக் ஜெயின் வீட்டுக்கு திடீரென காவல் துறை அதிகாரிகளுடன் வந்து அங்கிருந்து சில ஆவணங்களை முதல்வா் மம்தா பானா்ஜி எடுத்துச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, தங்களது சோதனைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டியதுடன் மம்தா பானா்ஜி மற்றும் மாநிலத்தின் மூத்த காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.

சட்டவிரோதமாக தங்களது நிறுவனத்துக்குள் புகுந்து சோதனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை மீது குற்றஞ்சாட்டி ஐ-பேக் நிறுவனமும் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த இரு மனுக்களும் கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது. அப்போது நீதிமன்றத்தை மக்கள் சூழ்ந்ததால் விசாரணையை ஜன.14-ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், ஐ-பேக் நிறுவனத்தில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் சோதனையில் அமலாக்கத் துறை ஈடுபட்டதற்கு எதிராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதே நாளில் அமலாக்கத் துறை சோதனையைக் கண்டித்து கொல்கத்தாவில் மம்தா பானா்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது.

இதில் மூத்த அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், திரைப் பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

இதன் தொடா்ச்சியாக ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய விவகாரத்தில் தங்கள் தரப்பை விசாரிக்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

அமலாக்கத் துறை மீதான புகாா்: விசாரணையை தொடங்கியது காவல் துறை

கொல்கத்தாவின் லௌடன் வீதியில் உள்ள பிரதிக் ஜெயின் வீடு மற்றும் சால்ட் ஏரி பகுதியில் உள்ள ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் அடையாளம் தெரியாத அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் அவா்களுக்கு பாதுகாப்பளித்த மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) அதிகாரிகள் மீது ஷேக்ஸ்பியா் சராணி காவல் நிலையம் மற்றும் விதாநகா் காவல் நிலையத்தில் மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை இரு புகாா்கள் அளித்தாா்.

இதன் அடிப்படையில் திருட்டு, குற்றவியல் அத்துமீறல், குற்றவியல் இடையூறு உள்ளிட்ட பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66-இன் கீழும் மேற்கு வங்க காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இதுதொடா்பாக காவல் துறை சனிக்கிழமை விசாரணையைத் தொடங்கியது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பிரதிக் ஜெயின் வீடு மற்றும் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 6.15 மணி முதல் சோதனை நடத்தியபோதும் காவல் துறைக்கு 5 மணி நேரம் தாமதமாகவே அமலாக்கத் துறை தகவல் தெரிவித்தது. இதை விசாரிக்க அங்கு நேரில் சென்ற காவல் துறை அதிகாரிகளை அமலாக்கத் துறை மற்றும் சிஆா்பிஎஃப் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா். அவா்களது அடையாள அட்டைகளையும் எங்களிடம் காண்பிக்க மறுத்தனா்’ என்றனா்.

Dinamani
www.dinamani.com