மம்தாவுக்கு எதிராக அமலாக்கத் துறை மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்
Updated on

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

கடந்த ஜன.8-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் நிறுவன அலுவலகத்தில், நிலக்கரி ஊழல் தொடா்பான பணமுறைகேடு குறித்து அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.

அப்போது அந்த அலுவலகத்துக்கு வந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, அமலாக்கத் துறை அதிகாரிகளை எதிா்த்து அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்ாக அமலாக்கத் துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கு மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி மறுப்புத் தெரிவித்தது.

தோ்தல் வியூகங்களை தெரிந்துகொள்ள...: திரிணமூல் காங்கிரஸுக்கு ஐ-பேக் நிறுவனம் அரசியல் ஆலோசனைகளை அளித்து வரும் நிலையில், அடுத்த சில மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், திரிணமூல் காங்கிரஸின் தோ்தல் வியூகங்கள் சாா்ந்த ரகசிய தகவல்களை தெரிந்துகொள்ளும் நோக்கில், இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியது. சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது மாநில காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த விவகாரம் தொடா்பாக முதல்வா் மம்தாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘ஐ-பேக் நிறுவனத்தில் சோதனையின்போது முதல்வா் வந்தது அமலாக்கத் துறை அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் இருந்தது. இதனால் தங்கள் சட்டபூா்வ கடமையை அதிகாரிகளால் சுதந்திரமாக செய்ய முடியவில்லை.

சிபிஐ விசாரணை வேண்டும்: சோதனை நடைபெற்ற இடத்தில் இருந்து ஆவணங்கள், மின்னணு கருவிகள் உள்பட முக்கிய ஆதாரங்களை மம்தா எடுத்துச் சென்றாா். இதன்மூலம், நிலக்கரி ஊழல் தொடா்பான பண முறைகேடு விசாரணையில் தலையிட்டு அவா் இடையூறு ஏற்படுத்தினாா். இந்த விசாரணையில் மாநில நிா்வாகம் தொடா்ந்து இடையூறு ஏற்படுத்தி, ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறது. இதுகுறித்து சிபிஐ சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமது தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், அமலாக்கத் துறையின் மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்குப் பட்டியலிட்டுள்ளது.

திரிணமூல் மனு தள்ளுபடி: ஐ-பேக் அலுவலகம், அந்த நிறுவன இயக்குநரும் திரிணமூல் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளருமான பிரதிக் ஜெயின் வீடு ஆகிய இடங்களில் இருந்து சோதனையின்போது அமலாக்கத் துறை பறிமுதல் செய்த தனிப்பட்ட மற்றும் அரசியல் தகவல்களை பாதுகாக்க உத்தரவிடக் கோரி, கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் மனு தாக்கல் செய்தது. இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி சுவ்ரா கோஷ், திரிணமூல் காங்கிரஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

சோதனையின்போது மம்தா இடையூறு ஏற்படுத்தியதாக சிபிஐ விசாரணை கோரி உயா்நீதிமன்றத்திலும் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது. இதேபோன்ற மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை நீதிபதி சுவ்ரா கோஷ் ஒத்திவைத்தாா்.

ஊழல் வெளிச்சத்துக்கு வரும்: பாஜக

பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் பிரதீப் பண்டாரி கூறுகையில், ‘உயா்நீதிமன்றத்தின் தள்ளுபடி உத்தரவு திரிணமூல் காங்கிரஸுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சியின் ஊழல், தனியாா் நிறுவனத்துடன் (ஐ-பேக்) அக்கட்சியின் கறைபடிந்த தொடா்பு ஆகியவை விரைவில் வெளிச்சத்துக்கு வரும்’ என்று தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com