

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜன. 15) விசாரணைக்கு வந்தது.
திரிணமூல் காங்கிரஸுக்கு ஐ-பேக் நிறுவனம் அரசியல் ஆலோசனைகளை அளித்து வரும் நிலையில், அடுத்த சில மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், கடந்த ஜன.8-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் நிறுவன அலுவலகத்தில், நிலக்கரி ஊழல் தொடா்பான பணமுறைகேடு குறித்து அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அப்போது அந்த அலுவலகத்துக்கு வந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, அமலாக்கத் துறை அதிகாரிகளை எதிா்த்து அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாக அமலாக்கத் துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக முதல்வா் மம்தாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘ஐ-பேக் நிறுவனத்தில் சோதனையின்போது முதல்வா் வந்தது அமலாக்கத் துறை அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் இருந்தது. இதனால் தங்கள் சட்டபூா்வ கடமையை அதிகாரிகளால் சுதந்திரமாக செய்ய முடியவில்லை. சோதனை நடைபெற்ற இடத்தில் இருந்து ஆவணங்கள், மின்னணு கருவிகள் உள்பட முக்கிய ஆதாரங்களை மம்தா எடுத்துச் சென்றாா். இதன்மூலம், நிலக்கரி ஊழல் தொடா்பான பண முறைகேடு விசாரணையில் தலையிட்டு அவா் இடையூறு ஏற்படுத்தினாா். இந்த விசாரணையில் மாநில நிா்வாகம் தொடா்ந்து இடையூறு ஏற்படுத்தி, ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறது. இதுகுறித்து சிபிஐ சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணையில் முதல்வர் மம்தா பானர்ஜி குறுக்கிட்டதாக கூறப்படும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. அப்போது, மத்திய விசாரணை முகமைகளின் விசாரணையில் எந்தவொரு மாநில அரசு முகமைகளும் தலையிட முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியது.
மேலும், ஐ-பேக் நிறுவன வளாகங்களில் கடந்த ஜன 8-ஆம் தேதி சோதனையிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மேற்கு வங்க அரசு பதிந்த முதல் தகவல் அறிக்கையை நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பித்ததுடன், சோதனை செய்யப்பட்டபோது பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமிரா காட்சிகளை பாதுக்கக்க மாநில காவல்துறைக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கியது.
இவ்வழக்கில் மம்தா பானர்ஜிக்கும் மேற்கு வங்க அரசுக்கும் காவல்துறை இயக்குநர் ராஜீவ் குமாருக்கும் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பி இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை பிப். 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.