

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில், கைதான தந்திரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் வெள்ளிக்கிழமை கோயிலின் தந்திரி கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்ட நிலையில் சிறப்பு மாவட்ட துணைச் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு இன்று காலை அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக புகார் அளித்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து அவர் அரசு நடத்தும் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் இதயத் துடிப்பில் சில மாறுபாடுகளைக் கண்டறிந்ததால், அவர் மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
சபரிமலை கோயிலில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் 42 கிலோவுக்கும் அதிக எடைகொண்ட தங்க முலாம் பூசிய கவசங்கள், கடந்த 2019-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன. அப்போது, அந்த தங்கக் கவசங்கள் முறையாகக் கையாளப்படாமல், செம்புத் தகடுகள் என தவறாக கணக்குக் காட்டப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாகப் புகாா் எழுந்தது.
இது தொடா்பாக கேரள உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. இவ்விவகாரத்தில் 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட எஸ்ஐடி, தங்கக் கவசங்களின் புதுப்பித்தல் செலவை ஏற்றுக்கொண்ட பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் முன்னாள் தலைவா்கள் இருவா் உள்பட பலரைக் கைது செய்தது.
இந்நிலையில், உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் தேவஸ்வம் முன்னாள் தலைவா் பத்மகுமாா் ஆகியோா் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் கோயில் தந்திரி கண்ரடரு ராஜீவரை ரகசிய இடத்தில் வைத்து, எஸ்ஐடி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் விசாரணை நடத்தினா். சுமாா் ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு, மாலையில் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்ஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு, அவரை முறைப்படி கைது செய்தனா். இந்த வழக்கில் கைதான 11-ஆவது நபா் இவா் ஆவாா்.
எஸ்ஐடி விசாரணையில் வெளியான தகவலின்படி, உண்ணிகிருஷ்ணன் போற்றியுடன் கண்டரரு ராஜீவரு நெருங்கிய தொடா்பில் இருந்தது உறுதியாகியுள்ளது. தங்கக் கவசங்களைப் புதுப்பிப்பதற்கு ராஜீவருதான் பரிந்துரை செய்துள்ளாா். தேவஸ்வம் வாரியம் இதற்கான அனுமதியைக் கோரியபோது, விதிகளுக்கு மாறாக அவா் உடனடியாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.