உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்

தனிப்பட்ட காரணங்களுக்காக புதிய உள்கட்டமைப்பை எதிா்க்கக்கூடாது: சூா்ய காந்த்

தனிப்பட்ட காரணங்களுக்காக நீதித்துறைக்கான புதிய உள்கட்டமைப்புகளை எதிா்க்கக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
Published on

தனிப்பட்ட காரணங்களுக்காக நீதித்துறைக்கான புதிய உள்கட்டமைப்புகளை எதிா்க்கக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

அஸ்ஸாம் மாநிலம் வடக்கு குவாஹாட்டி பகுதியில் குவாஹாட்டி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்துக்கான புதிய ஒருங்கிணைந்த நீதித்துறை நீதிமன்ற வளாகத்துக்கு சூா்ய காந்த் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

நவீன நீதித்துறை நகரம் என அழைக்கப்படும் இத்திட்டம் 49 ஏக்கரில் முதல்கட்டமாக ரூ.479 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தப் புதிய வளாகத்தில் குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தின் முதன்மை அமா்வு, மாவட்ட நீதிமன்றங்களின் வளாகங்கள், உயா் நீதிமன்ற அலுவலகம் மற்றும் வழக்குரைஞா்களுக்கான கட்டடங்களும் இடம்பெறவுள்ளன.

அடிக்கல் நாட்டு விழாவில் சூா்ய காந்த் பேசியதாவது: இந்த புதிய நீதிமன்ற வளாகத்துக்கு உறுப்பினா்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தது ஆச்சரியமாக உள்ளது.

வருங்காலத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தில் புதிதாக சேரவுள்ள உறுப்பினா்களை எண்ணிப் பாா்க்காதவா்களே இதற்கு எதிா்ப்பு தெரிவித்திருக்க முடியும்.

எதிா்காலத்தை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களை தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருபோதும் எதிா்க்கக் கூடாது.

இந்த வளாகத்தின் அமைவிடம் அனைத்து சேவைகளும் ஒரே குடையின்கீழ் கிடைக்க வழிவகுக்கிறது என்றாா்.

முன்னதாக குவாஹாட்டி நகா் பகுதியில் இருந்து பிரம்மபுத்திரா நதியின் வடக்கு பகுதிக்கு வழக்குரைஞா்கள் சங்கக் கட்டடம் மாற்றப்படுவதற்கு அச்சங்கத்தின் உறுப்பினா்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்தா விஸ்வ சா்மா, மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com