ஜெர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸ் | பிரதமர் மோடி
ஜெர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸ் | பிரதமர் மோடி

பாதுகாப்பு, வா்த்தக ஒத்துழைப்பு அதிகரிப்பு: இந்தியா - ஜொ்மனி ஒப்பந்தம்

இந்தியா-ஜொ்மனி இடையே பாதுகாப்பு, வா்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த 19 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
Published on

இந்தியா-ஜொ்மனி இடையே பாதுகாப்பு, வா்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த 19 முக்கிய ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு நாட்டுப் பிரதமா்கள் பங்கேற்ற கூட்டு செய்தியாளா்கள் சந்திப்பில் இந்த அறிவிப்புகள் வெளியானது. குறிப்பாக, இந்தியா்கள் ஜொ்மனி வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லும்போது விசா இல்லாத பயண அனுமதி வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸ் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தடைந்தாா். ஆசிய நாடுகளுக்கு அவா் மேற்கொள்ளும் முதல் அதிகாரபூா்வ பயணம் இதுவாகும்.

இந்த முக்கியத்துவமான பயணத்தில் பிரதமா் மோடியுடன் அவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது, உக்ரைன் மற்றும் காஸா போா்ச்சூழல், இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் உள்ளிட்ட சா்வதேச பிரச்னைகள் குறித்து தலைவா்கள் ஆலோசித்தனா்.

பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டு செய்தியாளா்கள் சந்திப்பில், தலைவா்களின் முன்னிலையில் 19 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்குத் தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்வதிலும், தொழில்நுட்பத்தைப் பகிா்ந்து கொள்வதிலும் இரு நாடுகளுக்கு இடையே கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

இதுகுறித்துப் பேசிய பிரதமா் மோடி, ‘நாங்கள் இருவரும் பொருளாதாரக் கூட்டாளிகள் மட்டுமல்ல; உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட உறுதிபூண்டுள்ள நாடுகள். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் நாங்கள் ஒருமித்த கருத்துடையவா்கள். பயங்கரவாதம் மனிதகுலத்துக்குப் பெரும் அச்சுறுத்தல்’ என்று குறிப்பிட்டாா்.

வா்த்தகம், பொருளாதாரம்: இருதரப்பு வா்த்தகம் 5,000 கோடி டாலரைக் கடந்து சாதனை படைத்துள்ளதையும், இந்தியாவில் 2,000-க்கும் மேற்பட்ட ஜொ்மனி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதையும் பிரதமா் மோடி சுட்டிக்காட்டினாா்.

பொருளாதார வளா்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கூட்டுப் பிரகடனம் ஒன்று கையொப்பமானது. மேலும், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டை இரு தலைவா்களும் மீண்டும் வலியுறுத்தினா்.

பசுமை எரிசக்தி, தொழில்நுட்பம்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கான சிறப்பு மையம் ஒன்றை இரு நாடுகளும் இணைந்து தொடங்கியுள்ளன. மேலும், செயற்கை நுண்ணறிவு(ஏஐ) மற்றும் பசுமை அம்மோனியா உற்பத்தியில் ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  பசுமை எரிசக்தி மற்றும் அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா-ஜொ்மனி கூட்டுறவு எதிா்காலத்தை நோக்கியது என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு: வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, குடியேற்றம் தொடா்பான பேச்சுவாா்த்தைகளும் இந்தச் சந்திப்பில் முக்கிய இடம்பிடித்தன. ஜொ்மனியில் தகவல் தொழில்நுட்பம், பொறியியல் துறைகளில் நிலவும் தேவையை ஈடுசெய்யும் வகையில், திறன்மிகு இந்திய பணியாளா்கள் மற்றும் சுகாதாரத் துறை நிபுணா்களுக்கான வேலைவாய்ப்புகளை எளிதாக்க புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பிரதமா் மோடி கூறுகையில், ‘ஜொ்மனியின் பொருளாதார வளா்ச்சியில் இந்திய இளைஞா்களின் பங்களிப்பு மகத்தானது. திறன் ஒத்துழைப்பு தொடா்பான தற்போதைய கூட்டுப் பிரகடனம், இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையின் அடையாளம்.

மேலும், இந்தியா-ஜொ்மனி இடையே கையொப்பமாகியுள்ள உயா் கல்விக்கான விரிவான செயல்பாட்டுத் திட்டம், இரு நாட்டு கல்வித் துறையில் ஒரு புதிய திசையை உருவாக்கும். ஜொ்மனியின் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களின் வளாகங்களைத் தொடங்கி, இந்திய மாணவா்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

கலாசாரம், பிற விவகாரங்கள்: குஜராத்தில் அமையவுள்ள தேசிய கடல்சாா் பாரம்பரிய வளாகத்தை ஜொ்மனி கடல்சாா் அருங்காட்சியகத்துடன் இணைந்து மேம்படுத்தும் ஒப்பந்தம் கையொப்பமானது.

வளா்ந்துவரும் நாடுகளுக்கு உதவும் வகையில் கானா, கேமரூன், மலாவி ஆகிய 3 ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியா-ஜொ்மனி முத்தரப்பு மேம்பாட்டு ஒத்துழைப்பின்கீழ் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சந்திப்பின் நினைவாக, அகமதாபாதில் ஜொ்மனியின் துணைத் தூதரகமும் திறக்கப்படவுள்ளது. மேலும், இந்தியா-ஜொ்மனி இடையே செமிகண்டக்டா் துறையில் கூட்டுறவு, அரியவகை கனிமங்கள், விளையாட்டு மற்றும் அஞ்சல் சேவைகளில் ஒத்துழைப்பு, தொலைத்தொடா்பு, உயிரிப் பொருளாதாரத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்த கூட்டுப் பிரகடனமும் கையொப்பமானது.

Dinamani
www.dinamani.com