

பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.18 மணியளவில் 16 செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஏவியது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) தயாரித்துள்ள பாதுகாப்புத் துறை பயன்பாட்டுக்கான இஓஎஸ்-என் 1 (அன்விஷா) எனும் அதிநவீன செயற்கைக்கோள் உள்பட 16 இந்திய மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட்டில் ஏவப்பட்டது.
முதன்மைச் செயற்கைக்கோளான இஓஎஸ்-என் 1, தரையில் இருந்து 505 கி.மீ. தொலைவு கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட இருந்தது. அதேபோல், ஸ்பெயின் ஸ்டாா்ட் அப் நிறுவனம் உருவாக்கிய கிட் எனப்படும் சிறிய விண்கலமும் அனுப்பப்பட்டது. அதைப் பூமிக்கு மீண்டும் தரையிறக்கும் சோதனையும் மேற்கொள்ளப்பட இருந்தது.
இந்த நிலையில், மூன்றாவது நிலையில் ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகிச் சென்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
”இன்று பிஎஸ்எல்வி சி62 / இஓஎஸ் - என்1 திட்டத்தை செயல்படுத்த முயற்சித்துள்ளோம். பிஎஸ்எல்வி ராக்கெட் இரண்டு திட எரிபொருள் நிலைகள் மற்றும் இரண்டு திரவ எரிபொருள் நிலைகளைக் கொண்ட நான்கு நிலை ராக்கெட் ஆகும்.
மூன்றாவது நிலையின் இறுதி வரை ராக்கெட்டின் செயல்பாடு எதிர்பார்த்தபடியே இருந்தது. மூன்றாவது நிலை முடிவடையும் தருணத்தில் ராக்கெட்டில் அதிகப்படியான அதிர்வுகளைக் கண்டோம். இதன் விளைவாக, ராக்கெட்டின் பயணப் பாதையில் ஒரு விலகல் காணப்படுகிறது. நாங்கள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.