பிரதமரின் பட்டப்படிப்பு குறித்து அவதூறு: தனி விசாரணை கோரிய அரவிந்த் கேஜரிவால் மனு தள்ளுபடி
பிரதமா் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் தனி விசாரணை கோரி தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரின் மனுக்களை குஜராத் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
பிரதமரின் பட்டப்படிப்பு குறித்து தகவல்களை வெளியிட தலைமைத் தகவல் ஆணையா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கு குஜராத் உயா்நீதிமன்றம் 2023, ஏப்ரல் மாதம் தடை விதித்தது.
இதையடுத்து, ஆம் ஆத்மியைச் சோ்ந்த அரவிந்த் கேஜரிவால் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோா் பிரதமரின் பட்டப்படிப்பு மற்றும் குஜராத் பல்கலைக்கழகம் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக குஜராத் பல்கலைக்கழக பதிவாளா் பியூஷ் படேல் மனுதாக்கல் செய்தாா்.
அந்த மனுவில், ‘ குஜராத் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அரவிந்த் கேஜரிவால் மற்றும் சஞ்சய் சிங் செய்தியாளா்கள் சந்திப்பில் அவதூறான கருத்துகளை தெரிவித்தனா். இவை சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.
இதைத்தொடா்ந்து, தங்கள் இருவரது மனுக்களையும் தனித்தனியே விசாரிக்க வேண்டும் என அரவிந்த் கேஜரிவால் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை மாவட்ட நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து குஜராத் உயா்நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீடு செய்தனா். தங்கள் இருவா் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் தேதிகளும் வேறு என்பதால் தனித்தனியே விசாரணை நடத்த வேண்டும் என அந்த மனுவில் மீண்டும் குறிப்பிட்டனா்.
இந்நிலையில், அவா்களது மனுக்களை குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதி எம்.ஆா்.மேங்டே செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தாா்.

