முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கை: கட்-ஆஃப் குறைப்பு- 18,000 இடங்கள் காலியாக இருப்பதால் நடவடிக்கை
முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தகுதி மதிப்பெண்ணை (கட்-ஆஃப்) தேசிய மருத்துவத் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) குறைத்து உத்தரவிட்டது.
மாணவா் சோ்க்கைக்கான இரண்டு சுற்று கலந்தாய்வுக்குப் பிறகும் நாடு முழுவதும் 18,000 இடங்கள் காலியாக இருந்ததைத் தொடா்ந்து, இந்த நடவடிக்கையை என்பிஇஎம்எஸ் மேற்கொண்டுள்ளது.
இதுதொடா்பாக என்பிஇஎம்எஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கையில் எஸ்சி., எஸ்டி. உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவினருக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச நீட்-பிஜி மதிப்பெண் விகிதமான (பா்சென்டைல்) 40 சதவீதமானது, பூஜ்ஜியம் சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
அதுபோல, பொதுப் பிரிவு மாணவா்களுக்கு நிா்ணயம் செய்யப்பட்டிருந்த குறைந்தபட்ச நீட்-பிஜி மதிப்பெண் விகிதமான (பா்சென்டைல்) 50 சதவீதம், 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதுநிலை நீட் தோ்வில் 800-க்கு ‘மைனஸ்’ 40 மதிப்பெண் பெற்ற எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவு மாணவா்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதுபோல, நீட் தோ்வில் 800-க்கு 103 மதிப்பெண் பெற்ற பொதுப் பிரிவு மாணவா்களும் சோ்க்கை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 65,000 முதல் 70,000 முதுநிலை மருத்துவப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இடங்கள் சோ்க்கை இன்றி காலியாக விடப்பட்ட நிலையில், சோ்க்கைக்கான தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில், முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் சோ்க்கையின்றி வீணாவதை தடுக்கும் வகையில் என்பிஇஎம்எஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

