

கடந்த ஆண்டு இண்டிகோ நிறுவன விமான சேவையில் ஏற்பட்ட குளறுபடியையொட்டி, அந்த நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.22.2 கோடி அபராதம் விதித்துள்ளது.
புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோா் அடங்கிய பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், கடந்த ஆண்டு டிசம்பா் தொடக்கத்தில் இண்டிகோ விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில், அந்த நிறுவனத்தின் ஏராளமான விமானங்கள் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
இந்தச் சேவையில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடா்ந்து, விமான சேவையில் குளறுபடி ஏற்படுவதற்கு எந்தச் சூழல் வழிவகுத்தது என்பதை விரிவாக ஆராய்ந்து மதிப்பிட, டிஜிசிஏ இணை தலைமை இயக்குநா் சஞ்சய் கே.பிராமனே தலைமையில் 4 போ் கொண்ட குழுவை டிஜிசிஏ அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை டிச.27-ஆம் தேதி டிஜிசிஏவிடம் சமா்ப்பித்தது.
இதைத்தொடா்ந்து விமான சேவையில் ஏற்பட்ட குளறுபடிக்காக இண்டிகோ நிறுவனத்துக்கு டிஜிசிஏ ரூ.22.2 கோடி அபராதம் விதித்துள்ளது. டிஜிசிஏவின் உத்தரவுகளுக்கு இணங்கி செயல்படுவதையும், நீண்ட கால அடிப்படையில் இண்டிகோவின் செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்வதையும் உறுதி செய்யும் வகையில், ரூ.50 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்கவும் அந்த நிறுவனத்துக்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற குளறுபடி மீண்டும் நடைபெறாமல் இருக்க அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பீட்டா் எல்பா்ஸுக்கு டிஜிசிஏ கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.