

இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், இதுவரை நிறைவேற்றப்படாமல் 19 அரசு மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையானது கலைக்கப்பட்டால் அங்கு நிலுவையில் உள்ள மசோதாக்களும் கலைக்கப்படுவது வழக்கம். ஆனால், என்றும் கலைக்க முடியாத மாநிலங்களவையின் மசோதாக்கள் ஒருபோதும் கலைக்கப்படாது எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தில்லி வாடகைத் திருத்த மசோதா -1997, மாநிலங்கள் இடையேயான புலம்பெயர் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்) திருத்த மசோதா - 2011 உள்ளிட்ட 19 அரசு மசோதாக்கள் இதுவரை மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இதில், இந்திய மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த கடந்த 1992 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மசோதா சுமார் 33 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2 குழந்தைகளுக்கு அதிகமாகப் பெற்றுக்கொண்டால் அவர்கள் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என இந்த மசோதாவில் முன்மொழியப்பட்டது.
முன்னதாக, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பதவியில் இருந்து ஓய்வுபெற்று வரும் மாநிலங்களவையானது நாடாளுமன்றத்தின் நிரந்தர அவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.