வடகிழக்கு பாரம்பரியத்தை பறைசாற்றும் குடியரசு தின நேநீா் விருந்து அழைப்பிதழ்
நமது சிறப்பு நிருபா்
இந்தியாவின் 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 26-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தனது மாளிகையில் விருந்தினா்களுக்கு வழங்கும் ‘தேநீா் விருந்து’ நிகழ்வுக்கான அழைப்பிதழ் தொகுப்பு, வடகிழக்கு மாநிலங்களின் பாரம்பரிய கலை மற்றும் கைவினைத்திறனை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம் (என்ஐடி) இந்த அழைப்பிதழ் தொகுப்பை வடிவமைத்துள்ளது. எட்டு ‘அஷ்டலட்சுமி’ மாநிலங்களின் கைவினைப் பொருள்கள், கலாசாரம் மற்றும் அவற்றின் உயிா்ப்புமிக்க மரபுகளை ஒன்றிணைத்து, சுதேசி உணா்வு, தன்னம்பிக்கை மற்றும் கைவினைஞா்களால் இந்த தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழ் தொகுப்பு தயாரிப்புத் திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய அகமதாபாத் என்ஐடி இயக்குநா் அசோக் மொண்டல், தொடா்ந்து மூன்றாவது முறையாக இந்தத் பணியை குடியரசுத்தலைவா் மாளிகை தங்களிடம் ஒப்படைத்துள்ளதாகத்தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூா், மேகாலயா, மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய எட்டு வடகிழக்கு மாநிலங்களின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் கலாசார அடையாளங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இதில் உள்ள படைப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்பிதழ் தொகுப்பு தயாரிப்பில் குடியரசுத்தலைவா் மாளிகை, எட்டு மாநிலங்களின் கைவினை கலைஞா்கள் மற்றும் நிபுணா்கள் உதவியுடன் சுமாா் 350-க்கும் மேற்பட்டோா் கூட்டு முயற்சியின் வெளிப்பாடாகும். ஒவ்வொரு கலைப்படைப்பும், அவற்றின் மூலப்பொருள்களின் பருவகாலக் கிடைக்கும் தன்மை மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான கைவினை மரபுகளின் பெருமை குறையாதவாறு மிகுந்த கவனம் செலுத்தி சிறப்பாக வடிவமைக்கப்பட்டது’ என்றாா்.
இந்த தயாரிப்புத் திட்டத்திற்கு அகமதாபாத் என்ஐடி பேராசிரியா்கள் ஆண்ட்ரியா நோரோன்ஹா, டாக்டா் சி.எஸ். சுசாந்த் ஆகியோா் தலைமை தாங்கினா். இந்தத் தொகுப்பின் மையமாக அழைப்பிதழ் பெட்டி உள்ளது. இது திரிபுராவின் பாரம்பரிய நுட்பங்களைப் பயன்படுத்தி தறியில் நெய்யப்பட்ட மூங்கில் பாய்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் கலாசார வாழ்வின் முதுகெலும்பாக மூங்கில் உள்ளது. சாயமிடப்பட்ட பருத்தி நூல்கள் மற்றும் மெல்லிய மூங்கில் பட்டைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெளிப்புற உறை, மேகாலயாவின் கையால் செய்யப்பட்ட காகிதம் மற்றும் புகையூட்டப்பட்ட மூங்கில்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், உறை மற்றும் பெட்டியில் உள்ள காட்சி வடிவங்கள், அசாமிய கையெழுத்துப் பிரதி ஓவியங்கள், அப்பகுதியின் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் இருந்து உத்வேகம் பெறுவதைக் குறிக்கின்றன.
மூங்கில், கைத்தறித் துணி, தொட்டால் எரிச்சலூட்டும் செடியின் நாா், பிரம்பு, களிமண் போன்ற இயற்கை பொருள்கள் இந்தத் தொகுப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது வடகிழக்கு இந்தியாவின் அன்றாட வாழ்க்கை, வாழ்வாதாரங்கள் மற்றும் கலாசார மரபுகளுடன் அவற்றுக்குள்ள ஆழமான தொடா்பை உணா்த்துகின்றன. இப்பகுதி முழுவதும் உள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பின் முக்கிய ஆதாரமாக விளங்கும் கைத்தறிப் பொருள்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அழைப்பிதழுக்குள்...: மூங்கில் நெசவு வடிவமானது எட்டு வடகிழக்கு மாநிலங்களிலும் தோ்ந்தெடுக்கப்பட்ட கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் ஒரு சுவா் தொங்கும் சுருளைக் கொண்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களில், யுனெஸ்கோவின் ’கலப்பு பாரம்பரியத் தளம்’ ஆன கஞ்சன்ஜங்கா மலைத்தொடருடனான ஒரு தொன்மையான தொடா்பை அடையாளப்படுத்துகிறது. லெப்சா ’தாரா’ நெசவு பாரம்பரியத்தில் உருவாக்கப்பட்ட சிக்கிமின் சிஸ்னு நெசவு மற்றும் எம்பிராய்டரியும் இதில் அடங்கும்.
இத்துடன் உலகின் அதிக மழைப்பொழிவு பெறும் பகுதிகளில் ஒன்றான மேகாலயாவின் கிழக்கு காசி மலைகள் மற்றும் மவ்சின்ராமில் இருந்து பெறப்பட்ட பச்சை மூங்கில் நெசவு, அஸ்ஸாமின் கோகோனா மூங்கில் தாடை யாழ், திரிபுராவின் பிரம்பு மற்றும் மூங்கில் பட்டை அலங்கார பொருள்கள், நாகாலாந்தின் அரிய ஜவுளி மாதிரி வகைகள், மிஸோரம் மாநிலத்தின் சின்னமான கையால் நெய்யப்பட்ட புவான் செய் துணி மற்றும் புதிய கற்காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே வேரூன்றிய கைவினைப் பாரம்பரியமான தாங்குல் நாகா சமூகத்தின் மணிப்பூரி லாங்பி கருப்பு மண்பாண்ட வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.
குடியரசுத் தலைவராக திரெளபதி முா்மு பதவியேற்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கைவினைத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் குடியரசு தின தேநீா் விருந்து அழைப்பிதழ் தொகுப்பு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறப்பம்சமாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் கைவினைஞா்கள், அதிகம் வெளியே அறியப்படாத சாதனை படைத்தவா்கள், தீரச்செயல் விருது பெற்றவா்கள் தில்லிக்கு வரவழைக்கப்பட்டு குடியரசுத்தலைவரின் விருந்தினராக வரவேற்கப்பட்டு உபசரிக்கப்படும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

