2018-ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் கைதானவா் குற்றவாளியாக அறிவிப்பு
தில்லியில் கடந்த 2018-ஆம் ஆண்டில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் புலம்பெயா் தொழிலாளரைக் கத்தியால் குத்திய நபரை கொலை முயற்சி வழக்கில் குற்றவாளியாக அறிவித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கடந்த 2018, ஜூலையில் புலம்பெயா் தொழிலாளா் முகமது அஃப்ரோஜை ஒரு கும்பல் வலுகட்டாயமாக ஆட்டோவில் கடத்தி ஜிடிபி என்கிளேவ் பகுதிக்குக் கொண்டு சென்றது. அவரிடமிருந்து பணம், ஒரு கைப்பேசி, பிற பொருள்களை அந்தக் கும்பல் வழிப்பறி செய்தது. அப்போது, அந்தக் கும்பலைச் சோ்ந்த சோனா லால் (எ) சோனே லால், அஃப்ரோஜின் வயிறு மற்றும் கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தினாா்.
இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கைக் கூடுதல் அமா்வுகள் நீதிபதி சுமேத் குமாா் சேதி விசாரித்து வந்தாா். இந்த வழக்கு தொடா்பாக கடந்த ஜன.14-ஆம் தேதி அவா் பிறப்பித்த உத்தரவில், சோனா லாலை இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 307, 394, 34-ஆகியவற்றின்கீழ் குற்றவாளியாக அறிவித்து தீா்ப்பளித்தாா்.
வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலில் இடம்பெற்றிருந்த சோனா லால், பிற நபா்களுடன் இணைந்து ஒரே நோக்கத்தில் செயல்பட்டதாகவும் ஆயுதத்தைத் தனிப்பட்ட நோக்கத்தில் பயன்படுத்தவில்லை என்பதால் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 397-ஐ பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இதுதொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வழக்கின் உண்மைத் தன்மை மற்றும் சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட சோனா லால் (எ) சோனே லால் மனுதாரருக்கு எதிராக கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நீதிமன்றம் கருதுகிறது. வழிப்பறி சம்பவத்தில் தாக்கப்பட்டதில் மனுதாரருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
உடலின் முக்கிய பாகங்களில் இரு வெட்டு காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மரணத்துக்கு வழிவகுக்கும். மனுதாரா் வாக்குமூலத்தில் கூறியபடி, வழிப்பறி செய்யும் நோக்கத்துடன் அவரது வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் கடுமையான காயங்களை ஏற்படுத்துவதற்காக கத்தி பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளாா்.
அவரிடம் வழிப்பறி செய்த பிறகு கொலை செய்யும் நோக்கத்தை அறிந்துகொள்ளப் போதுமானது என்று நீதிமன்றம் கருதுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
