

அமித் ஷாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி எம்பி-எல்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அமித் ஷா குறித்து சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்ததாக ராகுல் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ரேபரேலி எம்பியான ராகுல்காந்தி நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யவிருந்தார். இருப்பினும் அவர் கேரளத்தில் இருந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்குரைஞர் காசி பிரசாத் சுக்லா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எம்பி-எல்எல்ஏ நீதிமன்ற நீதிபதி சுபம் வர்மா, ராகுல்காந்தி நேரில் ஆஜராக இறுதி வாய்ப்பளித்து, அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுக்லா கூறுகையில்,
கேரளத்தில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி காரணமாக ராகுல் காந்தியால் விசாரணையில் கலந்துகொள்ள முடியவில்லை, அடுத்த விசாரணையின்போது அவர் ஆஜராவார் என்றும் தெரிவித்தார்.
இந்த அவதூறு வழக்கு, சுல்தான்பூர் மாவட்டத்தின் கோட்வாலி தேஹத் பகுதியில் உள்ள ஹனுமன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பாஜக நிர்வாகி விஜய் மிஸ்ராவால் 2018ல் தாக்கல் செய்யப்பட்டது.
புகார்தாரர் தரப்பு வழக்குரைஞர் சந்தோஷ் குமார் பாண்டே கூறுகையில், சாட்சியாக ராம் சந்திர துபேயிடம் ஜனவரி 6-ஆம் தேதி விசாரிக்கப்பட்டது, எதிர் தரப்பினரால் அவர் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார் என்று தெரிவித்தார்.
அடுத்த விசாரணை தேதியில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 313-இன் கீழ் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.