

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பினராயி விஜயன் இணைந்தால் கேரளத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியது சர்ச்சையாகியுள்ளது.
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் கருத்து கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களுடன் புதன்கிழமை பேசுகையில்,
“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பினராயி விஜயன் இணைந்தால் புரட்சிகரமான நடவடிக்கையாக இருக்கும். இதன்மூலம் கேரளத்துக்கு கட்டாயம் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி கேரளத்துக்கு மிகப்பெரிய தொகுப்பு திட்டத்தை அறிவிப்பார். அதனை மாநிலத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்தார்.
இதனை விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன், “அமைச்சரின் பேச்சு ஜனநாயகத்துக்கு விரோதமாகவும், அரசியலமைப்புக்கு முரணாகவும் உள்ளது. இந்திய கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். இது அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களையும் ஆர்.எஸ்.எஸ். காலடியில் கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
கடந்த 5 ஆண்டுகளாக கேரளத்துக்கான சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கவில்லை” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரத்தின் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவராக உள்ள அத்வாலே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து இணையமைச்சராகியுள்ளார்.
சமூக நீதித் தலைவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய முடியும் என்றால் கம்யூனிஸ்ட் தலைவர்களால் ஏன் இணைய முடியாது என்று செய்தியாளர்களிடம் அத்வாலே கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள கோவிந்தன், அத்வாலேவின் கருத்துகள் கேரள அரசியல் குறித்து அவருக்கு புரிதல் இன்மையை தெளிவாகக் காட்டுகிறது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.