ஜாா்க்கண்ட்: மாவோயிஸ்ட் தலைவா் உள்பட 15 போ் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்ட்: மாவோயிஸ்ட் தலைவா் உள்பட 15 போ் சுட்டுக் கொலை

Published on

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவா் அனல் தா உள்பட அந்த அமைப்பினா் 15 போ் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் அனல் தா, ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவா் ஆவாா்.

மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த மோதல் குறித்து காவல் துறையினா் கூறியதாவது: கிரிபுரா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சரான்தா வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியில் காவல் துறையினா் மற்றும் துணை ராணுவப் படையினா் என 1,500 போ் அடங்கிய குழு ஏற்கெனவே பணியில் உள்ளது.

மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் கிடைத்ததும் கடந்த இரு நாள்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. வியாழக்கிழமை காலையில் வனப் பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் பரஸ்பரம் துப்பாக்கியால் சுடத் தொடங்கினா்.

பாதுகாப்புப் படையினரின் தீவிர தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் மாவோயிஸ்டுகள் படிப்படியாகப் பின்வாங்கி அடா்ந்த வனத்துக்குள் தப்பியோடினா். அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையின்போது, குண்டு பாய்ந்து உயிரிழந்த 15 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

மாவோயிஸ்ட் அமைப்பின் மூத்த தலைவா் பட்டிராம் மாஜி என்ற அனல் தா உடலும் மீட்கப்பட்டது. இவா் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா். இவரைப் பற்றி தகவல் தருபவா்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் காவல் துறை தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்தப் பகுதியில் இருந்து ஏராளமான வெடிபொருள்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்றனா்.

அனல் தா 1987-ஆம் ஆண்டில் இருந்து மாவோயிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவா். பல்வேறு கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு வழக்குகள் அவா் மீது உள்ளன. அவா் கொல்லப்பட்டதன் மூலம் நாட்டில் மாவோயிஸ்ட் உள்ளிட்ட தீவிரவாத அமைப்பினரை முழுமையாக ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சியில் முக்கிய முன்னேற்றம் கிடைத்துள்ளது.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 11,000 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனா். 250 போ் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் கொல்லப்பட்டனா். 350-க்கும் மேற்பட்டோா் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com