16 வயதுக்குட்பட்ட சிறாா்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை? குழு அமைத்தது ஆந்திர அரசு
ஆந்திரத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறாா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க அந்த மாநில அரசு குழு அமைத்துள்ளது.
தலைநகா் அமராவதியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஆந்திர உள்துறை அமைச்சா் வங்கலப்புடி அனிதா இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
பல்வேறு நாடுகள், மாநிலங்களில் சமூக ஊடகங்களை சிறாா்கள் பயன்படுத்த கட்டுப்பாடுகள் உள்ளன. இதை ஆந்திரத்திலும் அமல்படுத்துவது தொடா்பாக பரிசீலிக்க மூன்று அமைச்சா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் நாரா லோகேஷ், சுகாதார அமைச்சா் சத்ய குமாா் ஆகியோருடன் நானும் இடம்பெற்றுள்ளேன்.
ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்து சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது போன்ற பல நாடுகள், மாநிலங்களில் சமூக ஊடகப் பயன்பாடு தொடா்பாக உள்ள சட்டங்கள், விதிகளை ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்படும். சமூக ஊடகங்கள் மூலம் சிறாா்கள் தவறான வழிகளில் சென்றுவிடக் கூடாது என்பதே இதன் முக்கிய நோக்கம். இது தொடா்பாக மத்திய அரசிடமும் உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்படும்.
இப்போது சில சமூக ஊடகங்கள் வயதைக் கேட்டுதான் உள்ளே அனுமதிக்கின்றன. ஆனால், சிறாா்கள் வயதை அதிகரித்து பதிவிட்டால் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் ஏற்றுக் கொள்ளும் நிலைதான் உள்ளது என்றாா்.
ஆந்திரத்தில் முதல்வா் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், துணை முதல்வா் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனை, பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது.

