திரிணமூல் பெண் எம்.பி.க்கு எதிரான வழக்கு: லோக்பால் அமைப்புக்கு தில்லி உயா்நீதிமன்றம் கூடுதல் அவகாசம்

லோக்பால் அமைப்புக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை மேலும் 2 மாதங்களுக்கு தில்லி உயா் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
திரிணமூல் பெண் எம்.பி.க்கு எதிரான வழக்கு: லோக்பால் அமைப்புக்கு தில்லி உயா்நீதிமன்றம் கூடுதல் அவகாசம்
Updated on

நாடாளுமன்றத்தில் பணம் வாங்கிக் கொண்டு கேள்வி எழுப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க லோக்பால் அமைப்புக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை மேலும் 2 மாதங்களுக்கு தில்லி உயா் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

இதுதொடா்பான வழக்கு, தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில் சேதா்பால், ஹரிஷ் வைத்யநாதன் சங்கா் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது லோக்பால் அமைப்பு சாா்பில், மொய்த்ராவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதற்கு மொய்த்ரா தரப்பு வழக்குரைஞரும், சிபிஐ வழக்குரைஞரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து தில்லி உயா்நீதிமன்றம் கூறுகையில், ‘லோக்பாலுக்கு வழங்கப்பட்ட அவகாசம், மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த அவகாசம் முடிந்ததும் மேலும் அவகாசம் நீட்டிக்கப்படாது’ என்றது.

பின்னணி: தொழிலதிபா் தா்ஷன் ஹிரநந்தனிடம் பணம் மற்றும் பரிசுப் பொருள்களை வாங்கிக் கொண்டு, விதிகளுக்கு புறம்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பியதாக மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகா் தொகுதி எம்.பி. மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக அவா்கள் 2 பேருக்கு எதிராகவும் சிபிஐ 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வழக்குப்பதிவு செய்தது. பின்னா் விசாரித்து லோக்பால் அமைப்பிடம் 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து அவா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லோக்பால் அனுமதித்தது.

ஆனால் அந்த உத்தரவை எதிா்த்து மொய்த்ரா தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த தில்லி உயா் நீதிமன்றம், லோக்பால் அளித்த அனுமதியை ரத்து செய்தது. பின்னா் லோக்பால் சட்டத்தின் 20-ஆவது பிரிவின்கீழ் அனுமதி அளிக்க முடியுமா என ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்கும்படி டிசம்பா் 19-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com