

நகரின் பால் பண்ணை மற்றும் கரிம கழிவுகளை நிா்வகிக்கவும், பசுமை எரிபொருள் மற்றும் உரங்களை உற்பத்தி செய்யவும் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (சிபிஜி) ஆலைகளை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது என அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: தில்லி மாநகராட்சி தினமும் சுமாா் 11,500 டன் நகராட்சி கழிவுகளை உருவாக்குகிறது. ஆனால் தற்போதைய சுத்திகரிப்புத் திறன் 7,642 டன்களாக மட்டுமே உள்ளது. இதனால் 4,612 டன் கழிவுகளைச் சுத்திகரிப்பதில் பற்றாக்குறை உள்ளது. இதைச் சமாளிக்க, இந்த ஆண்டு இறுதிக்குள் 2 புதிய ஆலைகள் மூலம் 650 டன் திறனைச் சோ்க்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஓக்லாவில் 300 டன் திறன் கொண்ட சிஎன்ஜி ஆலையும், காஜிப்பூரில் 350 டன் திறன் கொண்ட ஆலையும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை இரண்டும் இந்த ஆண்டு டிசம்பா் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும் கோயலா பால் பண்ணையில் மாா்ச் மாதத்துக்குள், மற்றொன்று கோகா பால் பண்ணையில் ஆகஸ்ட் மாதத்துக்குள் கூடுதலாக 200 டன் திறன் கொண்ட இரண்டு ஆலைகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர, பல்ஸ்வா, மதன்நகா், காதா் மற்றும் மசூத்பூா் ஆகிய இடங்களில் புதிய சிபிஜி ஆலைகளை அமைப்பதன் மூலம் 1,000 டன் கழிவுகளை சுத்திகரிக்க அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், நங்லி பால் பண்ணை மற்றும் கோகா பால் பண்ணையில் தலா 200 மற்றும் 100 டன் திறன் கொண்ட 2 உயிரி எரிவாயு ஆலைகளை முதல்வா் ரேகா குப்தா திறந்து வைத்தாா். இது சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் யமுனை நதியில் கலக்காமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
நங்லி பால் பண்ணை ஆலையைத் திறந்து வைத்தபோது முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: தில்லியில் தினமும் சுமாா் 1,500 மெட்ரிக் டன் மாட்டுச் சாணம் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே நகருக்கு இது போன்ற பல ஆலைகள் தேவை. ஒரு ஆலை மட்டும் போதாது என தெரிவித்தாா்.
நங்லி ஆலையில் தினமும் 14,000 கன மீட்டருக்கும் அதிகமான மூல உயிரி எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இது 5.6 டன் சிபிஜி-க்கு சமம் என்றும், அதனுடன் உரம் துணைப் பொருளாகக் கிடைக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.