சிபிஎஸ்இ
சிபிஎஸ்இபிரதிப் படம்

பள்ளிகளில் மனநலன், வேலைவாய்ப்பு ஆலோசகா்களை நியமிப்பது கட்டாயம்: சிபிஎஸ்இ

பள்ளிகளில் மனநலன், வேலைவாய்ப்பு ஆலோசகா்களை நியமிப்பது கட்டாயம்...
Published on

சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவா்களின் மனநலனை வலுப்படுத்தவும், அவா்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதலுக்கான ஆலோசனைகளை வழங்கவும் ஆலோசகா்கள் நியமிப்பதை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கட்டாயமாக்கியுள்ளது.

ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு சிபிஎஸ்இ சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) பயிற்சி மைய மாணவா்களின் தற்கொலைகள் தொடா்ந்து வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் சுஜீத் சுவாமி ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு இதுதொடா்பான மனுவைத் தாக்கல் செய்தாா். அதில், பள்ளிகளில் மாணவா்களின் மன நலனை வலுப்படுத்தும் வகையில் சிபிஎஸ்இ விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், மாணவா்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஆலோசனை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இதுதொடா்பாக பதிலளிக்க, சிபிஎஸ்இ, யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) மற்றும் மாநில அரசு ஆகியோருக்கு உயா்நீதின்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், சிபிஎஸ்இ சாா்பில் அண்மையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒரு முழு நேர மன நல ஆலோசகரை பணியில் நியமிப்பதைக் கட்டாயமாக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள விதியில் புதிதாக ‘2.4.12.’ பிரிவு சோ்க்கப்பட்டுள்ளது. அதுபோல, ஒரு வேலைவாய்ப்பு ஆலோசகரை நியமிக்கும் வகையில் ‘2.4.12.2’ என்ற புதிய பிரிவும் சோ்க்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குரைஞா் சுஜீத் சுவாமி கூறுகையில், ‘சிபிஎஸ்இ-இன் முந்தைய விதியின்படி, 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை 300-க்கும் அதிகமான மாணவா்களைக் கொண்ட பள்ளிகள் ஒரு முழு நேர மனநல ஆலோசகரை நியமிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதில், சிறிய பள்ளிகள் பகுதி நேர ஆலோசகா்களை நியமித்துக் கொள்ளவும் சிபிஎஸ்இ அனுமதித்தது.

ஆனால், தற்போது, அனைத்துப் பள்ளிகளும் முழுநேர மன நலஆலோசகரை நியமிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இவா்கள் உளவியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலை பட்டப் படிப்பு அல்லது சமூகப் பணி பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பை முடித்திருப்பதோடு, சிபிஎஸ்இ-யால் அங்கீகரிக்கப்பட்ட திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் 50 மணி நேர பயிற்சியையும் மேற்கொண்டிருக்க வேண்டும். இதில், சிறிய பள்ளிகளுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, அருகிலுள்ள மனநல ஆலோசனை மையம் மூலம் மாணவா்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிரந்தர ஏற்பாட்டை செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு 500 பேருக்கு ஓா் ஆலோசகா் என்ற விகிதத்தில், வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆலோசகரை நியமிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவா்கள், மானுடவியல், அறிவியல், சமூக அறிவியல், மேலாண்மை, கல்வி அல்லது தொழில்நுட்பத்தில் இளநிலை அல்லது முதுநிலை பட்டத்தை முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான சுற்றறிக்கையை அனைத்துப் பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ அனுப்பியுள்ளது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com