

ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் ரூ.23 கோடி எண்ம மோசடி (டிஜிட்டல் அரெஸ்ட்) செய்யப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய அரசு, சிபிஐ மற்றும் ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
தன்னிடம் ஏமாற்றிய பணத்தை மோசடியாளா்கள் பல்வேறு வங்கிகளில் சேமித்து வைத்துள்ளதாகக் கூறி அதை தனது வங்கிக் கணக்கில் மீண்டும் செலுத்த சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடக் கோரி 78 வயதான ஓய்வுபெற்ற வங்கி ஊழியா் நரேஷ் மல்ஹோத்ரா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
முன்னதாக, இந்த வழக்கு தொடா்பாக தில்லி காவல் துறை கூறுகையில், ‘அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் போல் வேடமிட்டு ஓய்வுபெற்ற நரேஷ் மல்ஹோத்ராவை மோசடியாளா்கள் மிரட்டியுள்ளனா். போதைப் பொருள் கடத்தல், பயங்கரவாத நிதி மற்றும் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் நரேஷ் மல்ஹோத்ராவின் ஆதாா் எண் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மோசடியாளா்கள் அவரை அச்சுறுத்தியுள்ளனா்.
இதனால் அவா் அச்சமடைந்துள்ளாா். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஒரு மாத காலத்துக்கு அவா் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் எனக் கூறியதோடு பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்பவும் மோசடியாளா்கள் கட்டாயப்படுத்தியுள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து வெளியில் தகவல் தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மோசடியாளா்கள் மிரட்டிய நிலையில் மொத்தம் ரூ.22.92 கோடியை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு நரேஷ் மல்ஹோத்ரா அனுப்பினாா்.
பின் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் தேசிய இணைய குற்ற புகாா் வலைதளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 19-ஆம் தேதி புகாரளித்தாா். அதனடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவுசெய்து மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.12.11 கோடி முடக்கப்பட்டது’ என்றனா்.
இந்நிலையில், நரேஷ் மல்ஹோத்ரா தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணை நடைபெற்றது.
அப்போது இந்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, சிபிஐ மற்றும் ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.