குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லியில் 2,348 இடங்களில் சோதனை: நூற்றுக்கணக்கானோா் கைது
குடியரசு தின விழாவை முன்னிட்டு போதைப் பொருள் கடத்தல், மற்றும் பிற குற்றங்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
நகரத்தின் 2,348 இடங்களில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ‘ஆபரேஷன் கவச் 12’ என்ற இந்த நடவடிக்கையில், 1,059 குற்றப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு காவல் அதிகாரிகள் ஈடுபட்டன. இந்த 24 மணி நேர நடவடிக்கை ஜனவரி 23-ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி ஜனவரி 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது, 31.21 கிராம் ஹெராயின் மற்றும் 30.75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கூடுதலாக, தில்லி கலால் சட்டத்தின் கீழ் 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 238 போ் கைது செய்யப்பட்டனா். நூற்றுக்கணக்கான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பொது இடங்களில் மது அருந்தியதற்காக 1,682 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆயுதச் சட்டத்தின் கீழ், 115 வழக்குகளில் 117 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், 16 நாட்டுத் துப்பாக்கிகள், 25 தோட்டாக்கள் மற்றும் 98 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. சூதாட்டம் தொடா்பான 149 வழக்குகளில் 261 போ் கைது செய்யப்பட்டு, ரூ.3.51 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம், 31 தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் 21 வாகனத் திருடா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 33 திருட்டு வாகனங்கள் மீட்கப்பட்டன. மேலும், தில்லி காவல்துறை சட்டத்தின் கீழ் 2,276 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 703 போ் கைது செய்யப்பட்டனா். 4,082 போ் முன்னெச்சரிக்கை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். 25,300 போ் தில்லி காவல்துறை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனா். பட்டியலில் உள்ள 4,545 குற்றப் பின்னணி கொண்ட நபா்கள் சரிபாா்க்கப்பட்டனா்.
மேலும், சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருள்கள் சட்டத்தின் கீழ் 4,714 விதிமீறல்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. மேற்கு தில்லியில் நடைபெற்ற தனித்தனி நடவடிக்கைகளில், 20 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், பலா் கைது செய்யப்பட்டனா். மேலும், ஆயுதச் சட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, 30 திருட்டு கைப்பேசிகளுடன் பிடிபட்டாா் என தெரிவிக்கப்பட்டது.

