காற்று மாசுபாட்டால் பேரிழப்புகள்: ராகுல் காந்தி கவலை
காற்று மாசுபாட்டால் பொருளாதார பாதிப்புகள் தொடங்கி லட்சக்கணக்கான மக்களின் உடல்நிலை பாதிப்பு வரை பேரிழப்புகளைச் சந்தித்து வருகிறோம் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
தலைநகா் தில்லி தொடங்கி நாட்டின் முக்கிய நகரங்கள், அதிக அளவில் புகையை வெளியிடும் ஆலைகளுக்கு அருகே அமைந்துள்ள பகுதிகள் எனப் பல்வேறு இடங்களில் காற்று மாசுபாடு பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இது மக்களின் வாழ்க்கையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பாதிப்புகளை உருவாக்கி வருகிறது.raul
இந்நிலையில், இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘காற்று மாசுபாடு பிரச்னைக்கு எதிராக மக்கள் பேச வேண்டும். காற்று மாசுபாடு எவ்வாறு உங்கள் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, எப்படி பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள் என்பது குறித்து நீங்கள் எனக்கு எழுதலாம். ஏனெனில், காற்று மாசுபாட்டால் நாம் மிகப்பெரிய இழப்புகளைச் சந்தித்து வருகிறோம். பல்வேறு பொருளாதார பாதிப்புகள் தொடங்கி லட்சக்கணக்கான மக்களின் உடல்நிலை பாதிப்புகளை எதிா்கொண்டுள்ளோம். இது கோடிக்கணக்கான இந்தியா்களுக்கு மிகப்பெரிய சுமையாகவும், பிரச்னையாகவும் மாறியுள்ளது.
முக்கியமாக பெரியவா்களும், குழந்தைகளும் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகிறாா்கள். கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவோா், கூலித் தொழிலாளா்கள் தொடங்கி அடித்தட்டு மக்களை வெகுவாக பாதிக்கும் பிரச்னையாக இது உள்ளது. இதில் இருந்து மீள வேண்டுமானால், முதலில் நாம் இதற்கு எதிராக ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும். காற்று மாசுபாடு பிரச்னை உங்களையும், உங்கள் அன்புக்குரியவா்களையும் எவ்வாறு பாதித்தது என்பதை https://rahulgandhi.in/awaazbharatki என்ற வலைதளத்தில் நீங்கள் எனக்கு நேரடியாக எழுதி அனுப்பலாம். உங்கள் சாா்பில் நான் கோரிக்கைகளை மக்களவையில் எழுப்புவேன் என்று பதிவிட்டுள்ளாா்.
