

சீட் பெல்ட் அணிந்திருந்ததால் விபத்தின்போது பெரிய காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பியதாக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கேரள மாநிலம், கோன்னி அருகே வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் ஆட்சியரின் வாகனத்தின் மீது மற்றொரு கார் மோதியது. இதில் ஆட்சியர், அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஓட்டுநர் ஆகிய மூவரும் காயமடைந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் பெரிய காயங்கள் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன் தொலைக்காட்சி சேனலிடம் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அவர் மேலும் கூறுகையில், வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தபோது நான் சீட் பெல்ட்அணிந்திருந்தேன். கார் மோதி தலைகீழாக கவிழ்ந்தபோது, சீட் பெல்ட் அணிந்திருந்ததால் வாகனத்திற்குள் தூக்கி வீசப்படவில்லை. உள்ளூர் மக்கள் என்னை வாகனத்திலிருந்து வெளியே எடுப்பதும் எளிதாக இருந்தது.
எதிரே தவறான திசையில் அதிவேகமாக வந்த கார், மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முயன்று தனது காரின் மீது மோதியது. எங்கள் ஓட்டுநர் விபத்தை தவிர்க்க முயன்றும் அது முடியவில்லை என்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக, தவறு செய்த வாகன ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மற்றொரு வாகனத்தில் இருந்த நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.