

உத்தரகாண்ட் இமயமலையில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் ஹிந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தீர்மானம் வரவிருக்கும் பத்ரிநாத் - கேதார்நாத் கோயில் குழுமத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
குளிர் காலத்துக்காக மூடப்பட்டுள்ள பத்ரிநாத் கோயில் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி மீண்டும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படவுள்ளது. இதேபோல், கேதர்நாத் கோயில் திறக்கப்படும் தேதி மகா சிவராத்திரி அன்று அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி தாம் பகுதிக்குள் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ கங்கோத்ரி கோயில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோல், பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களிலும், அக்கோயிலின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 45 பிற கோயில்களிலும் ஹிந்துக்கள் அல்லோதோருக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தீர்மானம் வருகின்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று பத்ரிநாத் - கேதார்நாத் கோயில் குழுமத்தின் தலைவர் ஹேமந்த் திவேதி தெரிவித்துள்ளார்.
இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், உத்தரகண்ட் முன்னாள் முதல்வருமான ஹரீஷ் ராவத், “இது பாஜகவின் திட்டம். புதிய பிரச்னையை உருவாக்குகிறார்கள். உலகின் மற்ற மதங்கள் மக்களைத் தங்களின் வழிபாட்டு தலங்களுக்கு ஈர்க்கின்றனர். அவர்கள் யாரையும் தடை செய்யவில்லை. இதனால், ஒருவரின் மதத்தின் மகத்துவமும் சிறப்புகளும் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.