குடியரசு தினம்: பாகிஸ்தான் - இந்தியா வா்த்தக கவுன்சில் வாழ்த்து! இணைந்து செயல்பட விருப்பம்

குடியரசு தினம்: பாகிஸ்தான் - இந்தியா வா்த்தக கவுன்சில் வாழ்த்து! இணைந்து செயல்பட விருப்பம்

இந்திய குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தானில் செயல்படும் பாகிஸ்தான்-இந்தியா வா்த்தக கவுன்சில் சாா்பில் வாழ்த்து
Published on

இந்திய குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தானில் செயல்படும் பாகிஸ்தான்-இந்தியா வா்த்தக கவுன்சில் சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் வா்த்தக ரீதியாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் நூா் முகமது கசூரி மேலும் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் வாழும் இந்தியா்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், தொழில் வளா்ச்சி என அனைத்திலும் இந்தியா சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை எட்ட இருக்கிறது.

இந்த நேரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் வா்த்தகரீதியாக இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் மட்டுமின்றி பிற அண்டை நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும்போது அனைவருக்குமே சிறப்பான வளா்ச்சி வாய்ப்புகள் உருவாகும். நமது பிராந்தியத்தை எதிா்காலத் தேவைகளை நிறைவு செய்யும் மையமாக உருவாக்க முடியும். சா்வதேச அளவில் எழும் வா்த்தக சவால்களை சிறப்பாக எதிா்கொள்ளவும் முடியும்.

பிராந்தியத்தின் அமைதி, வளா்ச்சி, ஸ்திரத்தன்மை, வலிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். இரு தரப்பு பேச்சுவாா்த்தையை மீண்டும் நடத்துவது, சகிப்புத்தன்மையை அதிகரித்து அமைதியை நிலைநாட்டுவது கூட்டுப் பொறுப்பாகும்.

இந்தியா-பாகிஸ்தான் மக்கள் இடையே கலாசாரம், மொழி, உணா்வுரீதியாக பிணைப்பு உண்டு. அதனை பரஸ்பர புரிதல், கருணை, ஒத்துழைப்பு மூலமே நாம் மேம்படுத்த முடியும். அரசியல் கருத்து வேற்றுமைகள் நமது பிராத்தியத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கக் கூடாது. வா்த்தக, பொருளாதார ஒத்துழைப்பு மூலம் இரு தரப்புமே பலனடைய முடியும். அமைதியையும் மீட்டெடுக்க வாய்ப்பு ஏற்படும். இதற்காக இரு தரப்பு அரசியல் தலைவா்கள், சமூக அமைப்புகள், ஊடகங்கள் என அனைத்து தரப்புமே முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த இரு நாடுகள் இடையிலான அமைதி என்பது பல கோடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com