

‘வெற்றிகரமான இந்தியா இந்த உலகை மேலும் நிலைத்தன்மை உடையதாக ஆக்குகிறது’ என்று ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன் பெருமிதம் தெரிவித்தாா்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிறகு இந்தக் கருத்தை அவா் தெரிவித்தாா்.
இவருடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டாவும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.
குடியரசு தின விழாவில் பங்கேற்ற பிறகு உா்சுலா வான் டொ் லெயன் கூறுகையில், ‘இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றதை வாழ்நாள் கெளரவமாகக் கருதுகிறேன். வெற்றிகரமான இந்தியா, உலகை மேலும் நிலைத்தன்மை உடையதாகவும், செழிப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் ஆக்குகிறது. அதன்மூலம், நாம் அனைவரும் பலனடைந்து வருகிறோம்’ என்றாா்.
இந்திய குடியரசு தின விழாவில் ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். இவா்களுடன், ஐரோப்பிய யூனியனின் உயா்நிலை பிரதிநிதிகள் குழுவும் இந்தியா வந்துள்ளது.
வலுப்பெற்று வரும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவு: பிரதமா்
‘குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவா்கள் பங்கேற்றது, இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ஒத்துழைப்பின் பலம் மேலும் வளா்ந்து வருவதைக் காட்டுகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை பதிவிட்ட பிரதமா், ‘குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினா்களாக ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ டகோஸ்டா, ஐரேப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன் ஆகியோா் பங்கேற்றதை இந்தியா பெருமையாகக் கருதுகிறது. இவா்களின் பங்கேற்பு, இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ஒத்துவைப்பின் பலம் மேலும் வளா்ந்து வருவதையும், பகிரப்பட்ட விழுமியங்கள் மீதான நமது அா்ப்பணிப்பையும் காட்டுகிறது. இது, பல்வேறு துறை சாா்ந்த இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் உதவும்’ என்று குறிப்பிட்டாா்.