பிரிட்டிஷ் ஆட்சியை விட மோசமானது சமத்துவமில்லாத இந்தியா: காங்கிரஸ்
பாஜக ஆட்சியில் நாட்டில் சமத்துவமின்மை அதிகரித்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியை விட சமத்துவமில்லாத இந்தியா மோசமானது எனவும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவின் ஒரு சிறிய பிரிவு மக்கள் பொருளாதார பலன்களின் பெரும்பகுதியை அனுபவிப்பதாகவும், பெரும்பான்மை பிரிவு மக்கள் வாழ்வாதாரத்திற்கே திண்டாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர், ஜன. 28 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. தொடர்ந்து, இரு கட்டங்களாக ஏப். 2 ஆம் தேதிவரையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. மத்திய அரசின் 2026 - 2027-க்கான பட்ஜெட் பிப்ரவரி முதல் தேதியில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார சமநிலையின்மை குறித்து காங்கிரஸ்மூத்த தலைவரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எம்.வி. ராஜீவ் கெளடா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் தரவுகள் நம்பத்தகுந்ததாக இல்லை. மைக்ரோ பொருளாதார குறியீடுகள் மற்றும் கடைநிலையில் உள்ள சிறு - குறு தொழில்களைச் சேர்ந்தவர்கள் பொருளாதார வளர்ச்சி குறித்த பிரதமரின் கூற்றுகளுடன் உடன்படவில்லை.
உண்மையான எதார்த்தத்தை விட நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.5% அதிகமாகவே இருக்கும் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் குறுகிறார்.
கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள், நகர்ப்புறங்களில் வேலை உத்தரவாதத்தில் நிலவும் நிலையற்ற தன்மையால், விவசாயம் செய்ய கிராமங்களை நோக்கி நகர்ந்துள்ளனர். தொழில் துறையில் உற்பத்திக்கான வேலைகள் இல்லாததால், விவசாயத்தில் குறைந்த அளவிலான உற்பத்தியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
நாட்டில் வருவாய் சமத்துவமின்மை நிலவுவதாக உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட மோசமான இந்தியாவை குறிக்கிறது.
நாட்டில் நடுத்தரக் குடும்பத்தினர் பலர் வருவாய் பற்றாக்குறையை உணர்கின்றனர். ஊதியம் குறிப்பிட்ட இடைவெளியில் அதிகரிக்காததால், தேவையை பூர்த்தி செய்யும் செலவுகளுக்காக கடன் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் எனப் பேசினார்.
Inequality in India is worse than it was during British Raj: Congress
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

