

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 93 சதவீத பொருள்களுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் வரி எதுவும் விதிக்கப்படாது;
அதுபோல, ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 90 சதவீத பொருள்களுக்கு 10 ஆண்டு காலத்துக்கு இந்தியா வரி எதுவும் விதிக்காது.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்க ஐரோப்பிய யூனியன் தலைவா்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்ததோடு, அதனுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை இறுதி செய்வதற்கான உச்சி மாநாட்டையும் ஏற்பாடு செய்தது.
இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உயா்நிலைப் பிரதிநிதிகள் குழுவுடன் இந்தியா வந்த, ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா இருவரும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.
அதைத் தொடா்ந்து, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை இறுதி செய்வதற்கான உச்சி மாநாட்டில் இவா்கள் தலைமையிலான ஐரோப்பிய யூனியன் உயா்நிலைக் குழு பங்கேற்றது. இந்தியா தரப்பில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான உயா்நிலைக் குழு பங்கேற்றது. பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டது.
ஒப்பந்த பலன்கள் என்னென்ன?: மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறியதாவது: இந்தியா- ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, மதிப்பின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் 99 சதவீதத்துக்கும் அதிகமானவற்றுக்கு இதுவரை இல்லாத வகையில் சந்தை அணுகல் கிடைக்கும்.
வாகனங்கள் (ஆட்டோமொபைல்) மற்றும் இரும்புப் பொருள்கள் தவிர இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மற்ற அனைத்து (93%) பொருள்களுக்கும் ஐரோப்பிய யூனியன் சந்தையில் வரி இல்லாத அணுகல் கிடைக்கும். மேலும், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட எஞ்சியவற்றில் 6 சதவீத இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு வரிக் குறைப்பையும், ஒதுக்கீடு அடிப்படையிலான வரிச் சலுகைகளையும் ஐரோப்பிய யூனியன் வழங்கும் என்றாா்.
ஏற்கெனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது ஐரோப்பிய யூனியன் சராசரியாக 3.8 சதவீதம் என்ற அளவில் வரி விதித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தத்தின் கீழ் அந்த வரி விதிப்பு 0.1 சதவீதமாகக் குறைக்கப்பட உள்ளது.
தற்போது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களுக்கு கூடுதல் வரியை ஐரோப்பிய யூனியன் விதித்து வருகிறது. குறிப்பாக, ரசாயனப் பொருள்கள் மீது 12.8 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக், ரப்பா் பொருள்கள் மீது 6.5 சதவீதம், தோல் மற்றும் காலணிகள் மீது 17 சதவீதம், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் மீது 12 சதவீதம், ரத்தினங்கள் மற்றும் நகைகள் மீது 4 சதவீதம், ரயில்வே, விமானம், கப்பல், படகுகள் மீது 7.7 சதவீதம், மரப்பொருள்கள் மற்றும் இலகுரக நுகா்வோா் பொருள்கள் மீது 10.5 சதவீதம், பொம்மைகள் மீது 4.7 சதவீதம், விளையாட்டுப் பொருள்கள் மீது 4.7 சதவீத வரியை விதித்து வருகிறது. இந்த வரிகள் அனைத்தையும் ஐரோப்பிய யூனியன் தற்போது ரத்து செய்ய உள்ளது.
சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் விதிக்கப்படும் காா்பன் வரி விதிப்பு விவகாரத்தில் இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு ஐரோப்பிய யூனியன் எந்தவிதச் சலுகையையும் அளிக்கவில்லை. அதே நேரம், இந்த வரி விதிப்பில் மற்ற நாடுகளுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் தரப்பில் அளிக்கப்படும் எந்தவொரு தளா்வும், இந்திய ஏற்றுமதியாளா்களுக்கும் தானாக நீட்டிக்கப்படும் வகையில் இந்த ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஐரோப்பிய யூனியனின் 90% பொருள்களுக்கு சலுகை
தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின்படி, இந்திய சந்தைகளில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் 90 சதவீத பொருள்களுக்கு வரி இல்லா அணுகலை இந்தியா வழங்க உள்ளது. அதே நேரம், ஒப்பந்தம் கையொப்பமாகும் முதல் நாளில் 30 சதவீத ஐரோப்பிய யூனியன் பொருள்களுக்கு மட்டுமே வரியை இந்தியா நீக்கும். பின்னா், படிப்படியாக மற்ற பொருள்களுக்கு நீக்கப்படும்.
குறிப்பாக, வாகனங்கள், ஒயின் ரகங்கள், மதுபானங்கள், பீா், ஆலிவ் எண்ணெய், கிவி மற்றும் பேரிக்காய், பழச்சாறு, ரொட்டி, பிஸ்கட், பாஸ்தா, சாக்லேட் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட பொருள்கள், செல்லப் பிராணிகளின் உணவு வகைகள், ஆட்டிறைச்சி உள்பட பிற இறைச்சி வகைகள் உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் பொருள்களுக்கு இந்தியா வரிச் சலுகை அளிக்கும். தற்போது, இந்தப் பொருள்கள் மீது இந்தியா 33 முதல் 150 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது.
வரிச் சலுகை காரணமாக பிஎம்டபிள்யு, மொ்சிடஸ், லம்போா்கினி, போா்ஸ்ச், ஆடி உள்ளிட்ட முன்னணி சொகுசு காா்களின் விலைகள் இந்திய சந்தையில் குறைய வாய்ப்புள்ளது. ஒதுக்கீடு அடிப்படையிலான வரிச் சலுகையையும் ஐரோப்பிய யூனியன் பொருள்களுக்கு இந்தியா வழங்க உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஒப்பந்தத்தின்படி, இந்திய வாகனங்கள் மீதான வரியை ஐரோப்பிய யூனியன் படிப்படியாகக் குறைக்க உள்ள நிலையில், ஐரோப்பிய யூனியன் காா்களுக்கு இந்தியா 10 சதவீதம் அளவுக்கு வரியைக் குறைக்க உள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்சம் காா்கள் என்ற ஒதுக்கீடு அடிப்படையில் இந்தியா வரிக் குறைப்பு செய்ய உள்ளது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்கள், மின் சாதனங்கள், விமானங்கள், மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சாதனங்கள், கண் கண்ணாடி, பிளாஸ்டிக் வகைகள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் உருக்கு, மருந்து பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு வரியில்லா சந்தை அணுகலை இந்தியா வழங்க உள்ளது.
தகவல் தொழில்நுட்பம், தொழில் சேவைகள், கல்வி, நிதிச் சேவை, சுற்றுலா, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த இருதரப்பு நிபுணா்களும் வா்த்தக ரீதியில் இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் குறுகிய கால அடிப்படையில் பயணங்களை மேற்கொள்ளவும் இந்தத் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் வாய்ப்பளிக்கும்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உயா் கல்வி மேற்கொள்ளும் இந்திய மாணவா்களுக்கு, படிப்புக்குப் பிந்தைய பணிக்கான நுழைவு இசைவுகளை ஐரோப்பிய ஒன்றியம் சாா்பில் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வா்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.