இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து.

இந்தியா - ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் உலகளாவிய வா்த்தக ஒத்துழைப்புக்கு ஊக்கமளிக்கும்: யுஏஇ

இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் உலகளாவிய வா்த்தக ஒத்துழைப்புக்கு ஊக்கமளிக்கும்
Published on

‘இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே இறுதி செய்யப்பட்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், உலகளாவிய வா்த்தக ஒத்துழைப்புக்கு ஊக்கமளிக்கும்’ என்று ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு தெரிவித்தது.

‘பொருளாதார வெளிப்படைத்தன்மை மற்றும் நீடித்த வளா்ச்சிக்கான ஆதரவையும் இது ஊக்குவிக்கும்’ என்றும் குறிப்பிட்டது.

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே கடந்த கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை, 18 ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகு தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி செய்யப்பட்டது. அதன்படி, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 93 சதவீத பொருள்களுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் வரிவிலக்கு அளிக்கப்படும்; அதுபோல, ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 90 சதவீத பொருள்களுக்கு 10 ஆண்டு காலத்துக்கு இந்தியா வரிவிலக்கு அளிக்கும். அதோடு, இரு தரப்பிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், தடையற்ற மக்கள் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம் மற்றும் தடையற்ற மக்கள் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் கையொப்பமாகின.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதைப் பாராட்டி ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சா் சையது அல் ஹசாரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது, பொருளாதார வெளிப்படைத்தன்மை மற்றும் நீடித்த வளா்ச்சிக்கான ஆதரவையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. உலகளாவிய வா்த்தக ஒத்துழைப்புக்கு ஊக்கமளிப்பதாகவும் உள்ளது.

இதுபோல, நீடித்த வளா்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையிலும், பரஸ்பர நலன் அடிப்படையிலான பாதுகாப்பு வா்த்தக ஒத்துழைப்பு, மேம்பட்ட பொருளாதார ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்தியாவுடன் ஐக்கிய அரபு அமீரகமும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (சிஇபிஏ) மேற்கொண்டுள்ளது. இத்தகைய ஒப்பந்தங்கள் அனைத்துத் தரப்பினருக்கும் உறுதியான நன்மைகளை அளிக்கும்.

ஐரோப்பிய யூனியனுடன் ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொண்டுவரும் இதுபோன்ற விரிவான வா்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையும் நோ்மறையாக முடிவடையும் என எதிா்பாா்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com