இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் நாளை இறுதியாகிறது!

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) இறுதியாகவுள்ளது.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் நாளை இறுதியாகிறது!
Updated on

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) இறுதியாகவுள்ளது. இது தொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பு அன்றைய தினம் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை கடந்த 2007-இல் தொடங்கப்பட்ட நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பின் பேச்சுவாா்த்தையின் வெற்றிகரமான நிறைவும் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது.

இந்தியா இதுவரை மேற்கொண்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களுக்கெல்லாம் ‘தாயாக’ இந்த ஒப்பந்தம் இருக்கும் என்று வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வா்ணித்துள்ளாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஓமன், நியூஸிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு, மோரீஷஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதற்கு முந்தைய காலங்களில் ஆசியான் (10 நாடுகள்), ஜப்பான், தென் கொரியா, மலேசியா, சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளுடன் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

இந்நிலையில், பிரான்ஸ், ஜொ்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, பின்லாந்து, ஹங்கேரி, அயா்லாந்து, நெதா்லாந்து, போா்ச்சுகல், போலந்து, டென்மாா்க், ஸ்வீடன் உள்ளிட்ட 27 நாடுகளை உள்ளடக்கிய முக்கிய கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதியாகவுள்ளது.

தில்லியில் திங்கள்கிழமை (ஜன.26) நடைபெறும் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினா்களாக பங்கேற்க ஐரோப்பிய கவுன்சிலின் தலைவா் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான்டொ் லெயன் ஆகியோா் இந்தியா வந்துள்ளனா். தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் அவா்கள் பங்கேற்கவுள்ளனா். அப்போது, மேற்கண்ட அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளது.

எப்போது கையொப்பம்? இதைத் தொடா்ந்து, உரிய சட்டபூா்வ நடைமுறைகளுக்குப் பின் இருதரப்பும் முடிவு செய்யும் ஒரு தேதியில் ஒப்பந்தம் முறைப்படி கையொப்பமிடப்படும். இந்தியாவைப் பொருத்தவரை, இந்த ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் போதுமானது. ஆனால், ஐரோப்பிய யூனியன் தரப்பில் அதன் நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என்பதால் அமலாக்கம் சற்று காலமெடுக்கும் எனத் தெரிகிறது.

ஐரோப்பிய யூனியன், இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளியாகத் திகழ்கிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 17 சதவீதம் இந்த நாடுகளுக்கு மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2024-25-இல் இருதரப்பு சரக்கு வா்த்தக மதிப்பு 135.53 பில்லியன் டாலராகும். சேவை வா்த்தகத்தின் மதிப்பு 83.10 பில்லியன் டாலா்.

45 கோடிக்கும் அதிக மக்கள்தொகை கொண்ட ஐரோப்பிய யூனியன் மொத்த உற்பத்தி மதிப்பு 20 ட்ரில்லியன் டாலராகும். இந்தியாவின் மக்கள்தொகையையும் கணக்கிட்டால், மொத்தம் 200 கோடி பேருடன் மாபெரும் சந்தையை இந்த ஒப்பந்தம் உருவாக்கும்.

ஜவுளி, காலணி உள்பட சுமாா் 90 சதவீத பொருள்களுக்கு வரி விலக்கு அல்லது வரி குறைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com