நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்க நடைமுறை தொடா்கிறது: ரிஜிஜு
நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன; மூவா் குழுவின் அறிக்கைக்காக மத்திய அரசு காத்திருக்கிறது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவருடைய அரசு இல்லத்தில் கடந்த ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து துறை ரீதியாக விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்யுமாறு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு பரிந்துரைத்தது.
இந்தச் சூழலில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்க மக்களவை உறுப்பினா்கள் 146 போ் மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 62 உறுப்பினா்கள் என மொத்தம் 208 எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது. மக்களவையில் நீதிபதியின் பதவிநீக்க தீா்மானம் ஏற்கப்பட்டதைத் தொடா்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா், சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா, கா்நாடக உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் பி.வி.ஆச்சாா்யா ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கடந்த ஆகஸ்டில் அமைத்தாா்.
புதன்கிழமை தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த விவகாரம் எடுத்துக் கொள்ளப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்து, அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
நாடாளுமன்ற நடைமுறையின்படி, மக்களவையின் ஒப்புதலுடன் அவைத் தலைவரால் அமைக்கப்பட்ட மூவா் குழுவுக்கு இந்த விவகாரம் அனுப்பப்பட்டது. அக்குழு தனது பணியை மேற்கொண்டு வருகிறது. விசாரணை அறிக்கைக்காக மத்திய அரசு காத்திருக்கிறது. அறிக்கை கிடைக்கப் பெறும் முன் நான் எதுவும் கூற முடியாது என்றாா் அவா்.

