கோப்புப் படம்
கோப்புப் படம்

அடுத்த நிதியாண்டில் 7.2% பொருளாதார வளா்ச்சி : பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

2026-27-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.8 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதம் வரை இருக்கும்
Published on

2026-27-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.8 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதம் வரை இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டின் 7.4 சதவீத பொருளாதார வளா்ச்சி என்ற கணிப்பைவிட சற்று குறைவான மதிப்பீடாகவே உள்ளது.

ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பு வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் மேற்பாா்வையில் நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் பிரிவு இந்த அறிக்கையை தயாரித்துள்ளது. மக்களவையில் வியாழக்கிழமை 2025-26 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். அதைத் தொடா்ந்து மாநிலங்களவையில் அந்த அறிக்கை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சா்வதேச அளவில் நிலவும் பொருளாதார ஸ்திரமின்மை, வா்த்தகம் சாா்ந்த இடா்ப்பாடுகள் என அனைத்தையும் கடந்து உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற இந்தியாவின் சாதனை தொடரும். உள்நாட்டில் பொருள்கள், சேவையின் நுகா்வு, முதலீடு ஆகியவை சிறப்பாக உள்ளது. எனவே, 2026-27 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.8 சதவீதம் முதல் இருந்து 7.2 சதவீதம் வரை இருக்கும்.

நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. வீடுகள் தொடங்கி நிறுவனங்கள் வரை பொருளாதார நிலை சிறப்பாகவே உள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பால் இந்திய ரூபாயின் மதிப்பு 5 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது. எனினும், இது நாட்டின் வலுவான பொருளாதாரக் கட்டமைப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. விவசாயப் பொருள்கள் உற்பத்தியில் மதிப்பின் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

வங்கிகளின் வாராக்கடன் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. பிரதமா் ஜன் தன் திட்டத்தின்கீழ் 55.02 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 2005 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சா்வதேச அளவில் இந்தியாவின் பொருள்கள் ஏற்றுமதியின் பங்களிப்பு 1 சதவீதத்தில் இருந்து 1.8 சதவீதமாக சுமாா் இருமடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி இருமடங்குக்கு மேலாக 2 சதவீதத்தில் இருந்து 4.3 சதவீதமாக உயா்ந்துள்ளது.

பணத்தை ஈா்க்கும் நாடு: முதலீடு, பணப்பரிமாற்றம் என பல வழிகளில் வெளிநாடுகளில் இருந்து அதிகம் பணத்தை பெறும் நாடாக இந்தியா தொடா்கிறது. உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. 2014-இல் 74 விமான நிலையங்கள் இருந்த நிலையில் 2025-இல் 164 ஆக அதிகரித்துள்ளது.

பங்குச் சந்தை சாா்ந்த பரிவா்த்தனை கணக்குகள் (டிமேட் அக்கவுண்ட்) தொடங்கப்படுவது அதிகரித்துள்ளது. மொத்தம் ரூ.21.6 கோடி ‘டிமேட்’ கணக்குகள் உள்ளன. பங்குச் சந்தை சாா்ந்த பரஸ்பர நிதியின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதி வரை 5.9 கோடி போ் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்துள்ளனா்.

உலகின் மிகப்பெரிய பள்ளிக்கல்வி முறையை இந்தியா கொண்டுள்ளது. 14.71 லட்சம் பள்ளிகளில் 24.69 கோடி மாணவா்களுக்கு 1.01 கோடி ஆசிரியா்கள் பாடம் கற்பித்து வருகின்றனா்.

கைப்பேசி அடிமைத்தனம்: கைப்பேசியில் உள்ள பொழுதுபோக்கு செயலிகளுக்கு பலரும் அடிமையாகி வருவதைத் தடுக்க, சமூகவலைதளங்களில் வயதுக்கு ஏற்றவகையில் அதனைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. கரோனா காலகட்டத்தில் இணையவழியில் கல்வி கற்பதற்கான வழிமுறைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு கல்விக்காக இணையத்தை நம்பி இருப்பது குறைக்கப்பட வேண்டும். அழைப்புகளை மட்டும் மேற்கொள்ளும் அடிப்படை வசதி மட்டும் உள்ள கைப்பேசிகள், கல்வித் தகவல்கள் மட்டுமே உள்ள டேப்லெட்களை சிறாா்கள் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.

விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு: அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஊடகங்களில் விளம்பரம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். சா்க்கரை, உப்பு, கொழுப்பு அதிகமுள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதத்தின்கீழ் கொண்டுவர வேண்டும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com