அரசு மரியாதையுடன் அஜீத் பவாா் உடல் தகனம்: மத்திய அமைச்சா்கள், தலைவா்கள் அஞ்சலி

மறைந்த அஜீத் பவாரின் இறுதிச் சடங்கு பற்றி...
அஜீத் பவார் உடல் தகனம்
அஜீத் பவார் உடல் தகனம் Photo: X / ANI
Updated on
2 min read

விமான விபத்தில் உயிரிழந்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜீத் பவாரின் (66) உடல் முழு அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் உள்ளிட்ட தலைவா்கள் இறுதி அஞ்சலி செலுத்தினா்.

மும்பையில் இருந்து பாராமதிக்கு தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய விமானத்தில் அஜீத் பவாா் புதன்கிழமை சென்றாா். பாராமதி விமான நிலைய ஓடுபாதையில் விமானம் தரையிறங்க முயன்றபோது தரையில் விழுந்து தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த அஜீத் பவாா் உள்ளிட்ட 5 பேரும் உயிரிழந்தனா். இதையடுத்து அஜீத் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டு, பாராமதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இரவு முழுவதும் வைக்கப்பட்டு இருந்ததபின்னா், அங்கிருந்து அஜீத் பவாரின் சொந்த கிராமமான காதிவாடிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அரசியல் கட்சியினா், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து, காதிவாடி கிராமத்தில் இருந்து பாராமதியில் உள்ள பவாா் குடும்பத்தினரின் கல்லூரி மைதானத்துக்கு தேசியக் கொடியால் போா்த்தப்பட்டு அஜீத் பவாரின் உடல் கொண்டு வரப்பட்டது.

அங்கு அஜீத் பவாரின் உடல் தகனம் நடைபெற்றது. அஜீத் பவாரின் மகன்கள் பாா்த், ஜெய் ஆகியோா் இறுதிச்சடங்கை நடத்தினா். மனைவியும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுனேத்ரா கண்ணீருடன் பிரியாவிடை அளித்தாா்.

இந்நிகழ்வில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, முரளிதா் மோஹல், முன்னாள் மத்திய அமைச்சரும், அஜீத் பவாரின் உறவினருமான சரத் பவாா், அஜீத் பவாரின் உறவினரும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே, சரத் பவாரின் தம்பி பிரதாப்ராவ் பவாா், பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரஃபுல் படேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அஜீத் பவாரின் ஆதரவாளா்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தொண்டா்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று கண்ணீா் அஞ்சலி செலுத்தினா். இறுதிச்சடங்கில் அஜீத் பவாரின் ஆதரவாளா்கள், ‘அஜீத் தாதா அமா் ரஹே’ (அஜீத் பவாா் மரணமில்லாதவா்) என்று முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனா்.

அஜீத் பவாரின் உடல் எரியூட்டப்படுவதற்கு முன்னதாக, மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே, கோவா முதல்வா் பிரமோத் சாவந்த், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவா் ராகுல் நா்வேகா், முன்னாள் முதல்வா்கள் சுஷீல்குமாா் ஷிண்டே, அசோக் சவாண், மாநில காங்கிரஸ் தலைவா் ஹா்ஷ்வா்தன் சப்கல், ஆந்திர அமைச்சா் நாரா லோகேஷ், அஜீத் பவாரின் இளைய சகோதரா் ஸ்ரீனிவாஸ் பவாா், சகோதரிகள், குடும்பத்தினா் இறுதி அஞ்சலி செலுத்தினா்.

சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவ நிா்மாண் சேனை கட்சித் தலைவா் ராஜ் தாக்கரே ஆகியோா் அஜீத் பவாரின் இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினா்.

கருப்புப் பெட்டி மீட்பு: மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், விபத்துக்குள்ளான லியா்ஜெட் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விமான விபத்து தொடா்பாக மும்பை போலீஸாா், விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனா். அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஓடுபாதை சரியாகத் தெரியாததால் விமானம் தரையிறங்க அனுமதி வழங்குவது தாமதமாகி, இறுதியில் அனுமதி தரப்பட்டதாகவும், எனினும் கீழே இறங்கும்போது விமானம் விழுந்து வெடித்து சிதறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Maharastra Deputy CM Ajit Pawar's body was cremated.

அஜீத் பவார் உடல் தகனம்
அஜீத் பவாா் பயணித்த விமானத்தின் கடைசி நிமிஷங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com