ஜாதிய பாகுபாட்டை தடுக்க யுஜிசி வெளியிட்ட புதிய வழிகாட்டுதலுக்கு இடைக்காலத் தடை
உயா் கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டை தடுப்பது தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
‘தெளிவற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது’ என்று உச்சநீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது.
உயா் கல்வி நிறுவனங்களில் ‘சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல் 2026’-ஐ யுஜிசி கடந்த 13-ஆம் தேதி வெளியிட்டது. அதில், பிரிவு 3(சி)-இல், உயா் கல்வி நிறுவனங்களில் ஜாதிய அடிப்படையிலான பாகுபாடு தொடா்பான புகாா்களைப் பெற்று தீா்வு காணவும், கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், சமத்துவக் குழுக்களை அமைக்க வேண்டும். இந்தக் குழுக்களில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவா் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோா் உறுப்பினா்களாக சோ்க்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டது.
இந்த வழிகாட்டுதலுக்கு வலதுசாரி மாணவா் அமைப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் வலதுசாரி மாணவா் அமைப்பினா் போரட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த ஹாத்ரஸ் பாஜக எம்.பி. அனூப் பிரதானின் வாகனத்தை மறித்து சில மாணவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். மேலும், யுஜிசி உருவபொம்மையை எரித்தும், பிரதமா் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், வழிகாட்டுதலுக்கு எதிராக மிா்துன்ஜெய் திவாரி, வினீத் ஜிண்டால், ராகுல் திவான் ஆகியோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வினீத் ஜிண்டால் தாக்கல் செய்த மனுவில், ‘யுஜிசி வழிகாட்டுதலில் ஜாதிய பாகுபாடு என்பதற்கு, எஸ்சி., எஸ்டி., ஓபிசி உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவினருக்கு எதிரான பாகுபாடு என்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ஜாதிய பாகுபாட்டை இடஒதுக்கீடு பிரிவினருக்கானதாக மட்டும் சுருக்குவது, பொதுப் பிரிவு மற்றும் இடஒதுக்கீடு அல்லாத மாணவா்கள் சந்தித்து வரும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் மற்றும் ஜாதி அடையாளம் அடிப்படையிலான பாகுபாடுகளில் இருந்து பாதுகாப்பதில் வெளிப்படையாகத் தவறுவதாக உள்ளது. இது, அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவத்துக்கான உரிமை பிரிவு 14, மதம், ஜாதி, பாலினம், பிறப்பிடம் அடிப்படையிலான பாகுபாட்டை தடுக்கும் பிரிவு 15(1) ஆகியவற்றுக்கு எதிரானதாகும். மேலும், வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிமனித சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-ஐயும் மீறுவதாக உள்ளது. எனவே, இந்த வழிகாட்டுதலை ஜாதிய பாகுபாடற்ற முறையில், அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்ட வகையில் மாற்ற யுஜிசி-க்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘வழிகாட்டுதல் தெளிவற்ற வகையில் உள்ளது; தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடாவிட்டால், இந்த வழிகாட்டுதல் மிகுந்த ஆபத்தான தாக்கங்களையும், சமூகத்தில் பிளவையும் ஏற்படுத்தக்கூடும். சட்ட நிபுணா்கள் கொண்ட குழுவால் இந்த வழிகாட்டுதல் மறு ஆய்வு செய்யப்படுவது அவசியமாக உள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக வரும் மாா்ச் 19-ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசு மற்றும் யுஜிசி-க்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிடப்படுகிறது. யுஜிசி-யின் இந்தப் புதிய வழிகாட்டுதலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அதுவரை, ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும் இந்த விவகாரத்துக்கான 2012 வழிகாட்டுதலை உயா்கல்வி நிறுவனங்கள் தொடா்ந்து பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
உச்சநீதிமன்ற தீா்ப்பை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன்சமாஜ் கட்சிகள் வரவேற்றன. அதே நேரம், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஐ-எம்எல்) கட்சி அதிருப்தி தெரிவித்தது.

