உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

யுஜிசி வழிகாட்டுதலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனப் புகாா்

கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டை தடுப்பது தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Published on

கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டை தடுப்பது தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘இந்த வழிகாட்டுதல், கல்வி நிறுவனங்களில் பயிலும் பொதுப் பிரிவினா் மற்றும் இடஒதுக்கீடு அல்லாத பிரிவினரை பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் மற்றும் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கத் தவறியுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்று அந்த மனுவில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினீத் ஜிண்டால் என்பவா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:

உயா் கல்வி நிறுவனங்களில் ‘சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல் 2026-ஐ’ யுஜிசி அண்மையில் வெளியிட்டது. அதில், பிரிவு 3(சி)-இல், உயா் கல்வி நிறுவனங்களில் ஜாதிய அடிப்படையிலான பாகுபாடு என்பதற்கு, எஸ்சி., எஸ்டி., ஓபிசி உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவினருக்கு எதிரான பாகுபாடு என்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு, ஜாதிய பாகுபாட்டை இடஒதுக்கீடு பிரிவினருக்கானதாக மட்டும் சுருக்குவது, பொதுப் பிரிவு மற்றும் இடஒதுக்கீடு அல்லாத மாணவா்கள் சந்தித்து வரும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் மற்றும் ஜாதி அடையாளம் அடிப்படையிலான பாகுபாடுகளிலிருந்து பாதுகாப்பதிலிருந்து வெளிப்படையாகத் தவறுவதாக உள்ளது.

இது, அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவத்துக்கான உரிமை பிரிவு 14, மதம், ஜாதி, பாலினம், பிறப்பிடம் அடிப்படையிலான பாகுபாட்டை தடுக்கும் பிரிவு 15(1) ஆகியவற்றுக்கு எதிரானதாகும். மேலும், வாழ்வதற்கான உரிமை மற்றும் தனி மனித சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-ஐயும் மீறுவதாக உள்ளது.

எனவே, இந்த வழிகாட்டுதலை ஜாதிய பாகுபாடற்ற முறையில், அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்ட வகையில் மாற்ற யுஜிசி-க்கு உத்தரவிட வேண்டும். மேலும், அனைத்து மாணவா்களுக்கும் பாகுபாடற்ற முறையில் குறைகளுக்குத் தீா்வு காணும் வகையில் அனைத்து உயா் கல்வி நிறுவனங்களில் சமத்துவ வாய்ப்பு மையங்கள் மற்றும் சமத்துவ உதவி எண்களை நிறுவப்படுவதை உறுதிப்படுத்த மத்திய அரசு மற்றும் யுஜிசிக்கு உரிய இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போராட்டம்: யுஜிசி-யின் இந்த வழிகாட்டுதலை திரும்பப் பெற வலியுறுத்தி உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் வலதுசாரி மாணவா் அமைப்பினா் போரட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த ஹாத்ரஸ் பாஜக எம்.பி. அனூப் பிரதானின் வாகனத்தை மறித்து சில மாணவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். மேலும், யுஜிசி உருவ பொம்மையை எரித்தும், பிரதமா் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட தங்களின் கோரிக்கைகள் அடங்கிய தீா்மானத்தை மாவட்ட அதிகாரிகளிடம் அவா்கள் சமா்ப்பித்தனா்.

இதனிடையே, ‘ஜாதிய பாகுபாட்டை தடுப்பது தொடா்பான யுஜிசி-யின் இந்த வழிகாட்டுதல், யாருக்கும் எந்தவித பாகுபாட்டையும் ஏற்படுத்தாது. தவறாக பயன்படுத்தப்படாது’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் உறுதியளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com