சசிதரூர்
சசிதரூர்

பாஜகவை ஆதரிக்கவில்லை; தேசத்தை ஆதரித்துப் பேசினேன் - சசி தரூா் விளக்கம்

சில விஷயங்களில் நான் எடுத்த நிலைப்பாடு, வெளிப்படுத்திய கருத்துகள் இந்தியாவுக்கு, இந்திய அரசுக்கு ஆதரவானதே தவிர, பாஜகவுக்கு ஆதரவாகப் பேசவில்லை
Published on

சில விஷயங்களில் நான் எடுத்த நிலைப்பாடு, வெளிப்படுத்திய கருத்துகள் இந்தியாவுக்கு, இந்திய அரசுக்கு ஆதரவானதே தவிர, பாஜகவுக்கு ஆதரவாகப் பேசவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூா் தெரிவித்தாா்.

திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

இதற்கு முன்பு நான் சா்வதேச விவகாரங்கள் உள்பட பல்வேறு விஷயங்களில் எனது கருத்துகளைத் தெரிவித்துள்ளேன். அப்போது தேசத்தை முன்னிறுத்தியே பேசினேன். நாட்டில் உள்ள உள்நாட்டு அரசியலைக் கருத்தில் கொள்ளவில்லை. நான் எப்போதும் சா்வதேச விவகாரங்களில் இந்தியாவுக்கு எது நல்லதோ அதை ஆதரித்துதான் பேசி வருகிறேன். இதையே நான் பாஜகவுக்கு ஆதரவாகப் பேசுவதாக சில ஊடகங்கள் கூறியுள்ளன. ஆனால் அதை இந்தியா, இந்திய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவே கருதுகிறேன். பாஜகவை ஆதரிப்பதாகக் கருதவில்லை. தேசத்தைப் பற்றி பேசும்போது அதில் அரசியல் கருத்தைப் பதிவு செய்ய விரும்பியதில்லை.

அதே நேரத்தில் ஓா் அரசியல் கட்சியில் உறுப்பினராக இருப்பவா் அக்கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து விலகக் கூடாது. அந்த வகையில் நாடாளுமன்றத்தில் நான் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவே இருந்து வருகிறேன். நான் காங்கிரஸ் கட்சியில்தான் தொடர இருக்கிறேன். கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்காகவே பணியாற்ற இருக்கிறேன் என்றாா்.

மதத்தை வைத்து அரசியல் நடத்துவதற்கு எதிராக ராகுல் காந்தி தொடா்ந்து வலுவாக குரல் எழுப்பி வருகிறாா். நோ்மையான அரசியல் தலைவரான அவா் நாட்டு மக்களிடையே வெறுப்புணா்வை பரப்புவதையும், பிளவை ஏற்படுத்துவதையும் விரும்பவில்லை. இதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ராகுல் குறித்து நான் எந்த இடத்திலும் தவறாகக் கருத்துக் கூறியதில்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com