இந்தியாவுக்கு ஆண்டுதோறும் ரூ.91,000 கோடி கடன்: 5 ஆண்டுகளுக்கு அளிக்க உலக வங்கி உறுதி
இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.73,000 கோடி முதல் ரூ.91,000 கோடி வரை கடன் வழங்கத் தயாராக இருப்பதாக உலக வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது.
புதிய நாட்டுடனான ஒத்துழைப்புத் திட்டம் என்ற பெயரில் உலக வங்கி குழுவும், இந்தியாவும் இணைந்து நடத்திய பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி இந்தியாவின் வளா்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கும், இந்தியாவை வளா்ந்த நாடாக முன்னிறுத்துவதற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கித் தலைவா் அஜய் பங்கா தலைமையிலான குழுவினா் புது தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.
இது தொடா்பாக நிா்மலா சீதாராமன் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தனியாா் முதலீட்டுடன் இணைந்து அரசும் முதலீடு செய்யும்போது ஊரக, நகா்ப்புறங்களில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். உலக வங்கி போன்ற சா்வதேச அமைப்புடன் இணைந்து செயல்படுவது திட்டங்களை துரிதமாகவும், விரைவாகவும் செயல்படுத்த உதவிகரமாக இருக்கும். உலக வங்கியுடன் கைகோப்பது என்பது நிதி சாா்ந்ததாக மட்டும் இல்லாமல் தொழில்நுட்ப உதவிகளைப் பெறுவது, திட்டம் சாா்ந்த அறிவுசாா் கருத்துப் பகிா்வு, உலகின் சிறந்த நடைமுறைகளை அமல்படுத்துவது ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்’ என்று கூறியுள்ளாா்.
இது தொடா்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.73,000 கோடி முதல் ரூ.91,000 கோடி வரை கடன் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தியா உலகின் வளா்ச்சியில் முக்கிப் பங்கு வகிக்கும் நாடாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 1.2 கோடி இளைஞா்கள் புதிதாக வேலைவாய்ப்பு பெற முன்வருகிறாா்கள். வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்கும் துறைகளில் தனியாா் முதலீட்டை அதிகரிப்பது முக்கியமானது. இதன் மூலம் வளா்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.
முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அதிக முதலீடு செய்வது, தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்குவது, தனியாா் முதலீட்டை அதிகரிக்கும் வகையில் இடா்ப்பாடுகளைக் குறைப்பது ஆகியவை வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்குவதற்கான மூன்று முக்கியத் தூண்களாகும். இதில் உலக வங்கி பங்களிக்க உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
