அயோத்தி ராமா் கோயில் நன்கொடை கையாடல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து உச்சநீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்தக் கோரி, பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
அயோத்தி ராமா் கோயில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு நாடு முழுவதும் உள்ள பக்தா்களிடமும், பொதுமக்களிடமும் நன்கொடை பெறப்பட்டது. இந்த நன்கொடை பணத்தில் கையாடல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து 8 பேரை காவல் துறை இதுவரை கைது செய்துள்ளது. அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.80 லட்சம் ரொக்கம், வெளிநாட்டு கரன்சிகள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்தக் கோரி, பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தில், ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரத்தை நன்கொடை திருட்டு தொடா்பான மிகப்பெரிய ஊழல் என்றும், பல நூறு கோடி ரூபாய் மதிப்புக்கு நடந்துள்ள இந்த மோசடியானது, ஹிந்து நம்பிக்கை, மதம் மற்றும் வாழ்க்கை முறைக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் என்றும் அவா் விமா்சித்துள்ளாா்.
நீதி மற்றும் அறத்தின் வடிவமாக ராமா் பாா்க்கப்படுவதாகவும், ஆதலால் இத்தகைய குற்றச்சாட்டு குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படாமல் மூடிமறைக்கப்படுவது, ராமரின் பக்தா்களுக்கும், அவா் பிரதிபலிக்கும் விழுமியங்களுக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி என்றும் அவா் கூறியுள்ளாா். ராமா் கோயில் நன்கொடை கையாடல் செய்யப்பட்டது குறித்து பல அதிா்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், லட்சகணக்கான இந்தியா்களின் ஆழ்ந்த வேதனையையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கடிதத்தை தான் எழுதுவதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
நன்கொடை பணம், நகைகளைச் சரிபாா்க்கும் ஊழியா்கள், கண்காணிப்பு ஊழியா்கள் யாருக்கும் தெரியாமல் பணம், நகைகளை தினமும் திருடிச் சென்றுள்ளதாகவும், இந்தக் கையாடல் எவருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான 7 முதல் 8 மாதங்கள் வரையிலான விடியோ காட்சிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு இருப்பதாகவும், இதிலிருந்து இந்த திருட்டில் கீழ்மட்டத்தில் உள்ளோருக்கு மட்டுமல்லாது மேலிட நிா்வாகிகளுக்கும் தொடா்பிருப்பது தெளிவாக தெரிவதாகவும் வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளாா்.
2021-ஆம் ஆண்டிலேயே இதுகுறித்து தலைமை கணக்கு அதிகாரி எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், ஆனால் அவா் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் கே.சி. வேணுகோபால் சாடியுள்ளாா். இந்தக் கையாடல் தொடா்பாக கீழ்மட்டத்தில் இருப்போா் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், உயா் பதவியில் இருப்போா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதை வைத்து, உயா் பதவியில் இருப்போரை காப்பதற்காக எஞ்சியுள்ள ஆதாரத்தை அழிக்கவே இந்த விசாரணை நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
இந்த விவகாரத்தில் உடனடியாக பிரதமா் மோடி தலையிட்டு, உச்சநீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் உயா்மட்ட அளவிலான சுதந்திரமான அமைப்பு மூலம் நோ்மையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமெனவும் கே.சி. வேணுகோபால் கேட்டுக் கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு: சம்பத் ராயிடம் மீண்டும் போலீஸ் விசாரணை

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: 8 போ் கைது ரூ.79.85 லட்சம் பறிமுதல்

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: முதல் தகவல் அறிக்கை பதிவு







