ராஜஸ்தானில் சொத்து மற்றும் அரசு வேலைக்காக தனது தாயாரை காரை ஏற்றி அவரது மகள் கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் நீரஜ் சர்மா(45). இவர், ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் இறந்ததால் கருணை அடிப்படையில் அந்த வேலை நீரஜ் சர்மாவிற்கு கிடைத்தது. இவர்களுடைய மகள் ஆயுஷி சர்மா (23).
ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் நீரஜ் சர்மா பலியானார். இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்த காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திய ஸ்கார்பியோ கார் வேகமாக வந்து மோதியதை கண்டறிந்தனர். கார் மோதிய வேகத்தில், நீரஜ் சர்மாவின் உடல் சுமார் 100 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய அந்த ஸ்கார்பியோ காரை போலீசார் தற்போது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். தற்செயலான விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்பதைக் கண்டறிந்த போலீஸார், விபத்து குறித்த விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தில் திடீர் திருப்பமாக, நீரஜ்ஜின் மகள் ஆயுஷி, தனது தாயைக் கொலை செய்ததை காவல் துறையினர் கண்டுப்பிடித்தனர். ஆயுஷி சர்மா, தனது பெரியப்பா மோகன் ஸ்வரூப், பெரியப்பாவின் மகனுடன் சேர்ந்து ரூ. 7 லட்சம் கொடுத்து கூலிப்படையினரை வைத்து, ஸ்கார்பியோ கார் மூலம் மோத செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகவுள்ள ஆயுஷியின் உறவினர் பால்ராமை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், “ஆயுஷியின் தந்தை நீதிமன்ற எழுத்தராகப் பணியாற்றி வந்தார். அவர் இறந்த பிறகு, அவரது அரசு வேலை கருணை அடிப்படையில் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட இருந்தது. அப்போது ஆயுஷி அந்த வேலையை பெற விரும்பினார். ஆனால், அவரது தாய் நீரஜ், அந்தப் பணியில் சேர்ந்தார்.
வேலை மட்டுமின்றி, சொத்து தொடர்பாகவும் தாய் மற்றும் மகளுக்கு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தகராறு நீடித்து வந்தது. இதனால், தாயை கொலை செய்துவிட்டால் அரசு வேலை மற்றும் சொத்து கிடைக்கும் என்று நினைத்து அவரது தாயை கொலை செய்ய பாரத்பூரைச் சேர்ந்த ஹேமந்த் சர்மாவிடம் ரூ. 7 லட்சம் கொடுத்து நீரஜைக் கொல்ல ஒப்பந்தம் செய்துள்ளார்” என்றனர்.
அரசு வேலை மற்றும் குடும்பச் சொத்துக்காக சொந்த தாயையே மகள் கூலிப்படை வைத்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Police claimed that Ayushi Sharma plotted her mother Neeraj Sharma's murder with the help of relatives and contract attackers, driven by the lure of family property and a government job.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








