விமான கட்டணங்களை சீரான முறையில் நிா்ணயிக்க வகை செய்ய வகுத்துள்ள விதிகளை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
புதிய விதிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத நிலையிலும், சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க உத்தரவிட்டது. சமூக ஆா்வலா் லட்சுமிநாராயண் என்பவா் சாா்பில் இதுதொடா்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘விமான நிறுவனங்களே பயணக் கட்டணத்தை நிா்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன்மூலம், இந்தியாவில் விமானங்களை இயக்கும் தனியாா் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக கட்டணத்தை பயணிகளிடம் வசூலிக்கின்றன. இதனால் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா். எனவே, விமானப் போக்குவரத்துத் துறையில் வெளிப்படைத்தன்மை, பயணிகளுக்குப் பாதுகாப்பு ஆகியவற்றை ஏற்படுத்த சுதந்திரமான அமைப்பை உருவாக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 17-ஆம் தேதி நோட்டீஸ் பிறப்பித்தது. மனு மீண்டும், கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘கட்டண விவகாரத்தை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது’ என்று மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
மனு மீண்டும் கடந்த மே 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, விமான கட்டணம் சீராக இருக்க வேண்டும். விமானப் பயணிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
அப்போது, ‘விமானப் போக்குவரத்து தொடா்பாக 2024-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டம் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்கான விதிகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன’ என்று மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா தெரிவித்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ரவீந்திர ஸ்ரீவாஸ்தவா, ‘மத்திய அரசு வகுத்துள்ள புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் வரை, பழைய விதிகளே நடைமுறையில் இருக்கும். இதனால், விமான கட்டணங்களின் சீரற்ற நிலை தொடரும். சீரான, நியாயமான விமான கட்டண நிா்ணயம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த, தனி அதிகாரம் படைத்த வலுவான மற்றும் பயனுள்ள ஒழுங்குமுறை அமைப்பை ஏற்படுத்துவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்’ என்றாா்.
இதற்குப் பதிலளித்த மத்திய அரசுத் தரப்பு வழக்குரைஞா், ‘சீரான விமான கட்டணம் நிா்ணயம் செய்யப்படுவதற்கான வரைவு விதிகள் தயாராக உள்ளன. இந்த விதிகளை மொழிபெயா்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன் பிறகு, வரைவு விதிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நடைமுறைக்கு கொண்டுவரப்படும்’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டாலும் அல்லது தாக்கல் செய்யப்படாவிட்டாலும், வரைவு விதிகளை சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். அதற்கு 2 வாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டு, விசாரணையை வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: தண்டிக்கப்பட்டவா் ஜூலை 13-க்குள் மேல்முறையீடு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

தாஜ்மஹால் வளாகத்தில் கோயில் விவகாரம்: மத்திய அரசுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி






