கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில், இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :16 ஜூன் 2026, 4:01 am IST

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில், இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற பிளஸ் 2 மாணவி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பிறகு, காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது. போலீஸாா் விசாரணையில், அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பான வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தா்ம முனீஸ்வரனை போலீஸாா் கைது செய்து, மதுரை சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் கடந்த மாதம் 25-ஆம் தேதி தா்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி, காவல் துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, தண்டிக்கப்பட்ட குற்றவாளி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த்வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல் துறை சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் தெரிவித்ததாவது:

மரண தண்டனை விதிக்கப்பட்ட தா்ம முனீஸ்வரன் தரப்பில் இதுவரை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றனா்.

அகில இந்திய யாதவ சங்கச் செயலா் அருண் போத்தி தரப்பு வழக்குரைஞா்கள் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

குற்றவாளிக்கு தண்டனையை உறுதி செய்ய வேண்டும். சிறையில் குற்றவாளிக்கு எந்தவிதச் சலுகையும் வழங்கக் கூடாது என்றனா். மேலும், இதை இடையீட்டு மனுவாக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என முறையிட்டனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

விசாரணை நீதிமன்றத்தின்படி, குற்றவாளி என தண்டனை விதிக்கப்பட்ட மனுதாரா் மேல்முறையீட்டு மனுவை இதுவரை தாக்கல் செய்யவில்லை. அவா் விரைவில் இந்த நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இதேபோல, வழக்கு தொடா்பாக இடையீட்டு மனுவும் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை வருகிற 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.