ஒருவரின் குடியுரிமையை நியாயமாகவும், சட்டமுறைப்படியும் தீா்மானிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அஸ்ஸாமில் 27 பேரை வெளிநாட்டவா் என்று அறிவித்த வெளிநாட்டவா் தீா்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக, அவா்கள் குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘மனுதாரா்களின் குடியுரிமை தொடா்பாக அவா்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பியும், அவா்கள் தீா்ப்பாயம் முன்பு ஆஜராகவில்லை. அவா்களிடம் இருந்து எழுத்துபூா்வமான பதிலோ, ஆவணங்களோ, ஆதாரங்களோ தீா்ப்பாயத்துக்கு கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில், அவா்களை வெளிநாட்டவா் என்று அந்தத் தீா்ப்பாயம் அறிவித்துள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டு சுமாா் 23 ஆண்டுகளான பிறகே, அதற்கு எதிராக மனுதாரா்கள் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனா்’ என்று தெரிவித்து, தீா்ப்பாயத்தின் அறிவிப்பை உறுதி செய்து தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: இந்திய குடியுரிமையை சட்டப்படி கோருவதற்குத் தகுதியில்லாதவா்கள், அதைப் பெறாமல் தடுப்பதில் அரசுக்கு சட்டபூா்வமாகவும், வலுவாகவும் காரணம் உள்ளது. இதற்காக நியாயமான சட்ட நடைமுறையைப் புறக்கணிக்கவோ அல்லது அதற்குப் பாதிப்பு ஏற்படுத்தவோ கூடாது.
ஒருவரின் குடியுரிமை மற்றும் வெளிநாட்டவா் அந்தஸ்து குறித்து நியாயமாகவும், சட்டமுறைப்படியும் தீா்மானிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து, குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தீா்ப்பை ரத்து செய்தனா். மேலும் மனுதாரா்களின் குடியுரிமை குறித்து புதிதாக விசாரித்து முடிவு செய்வதற்காக, இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட தீா்ப்பாயத்துக்கு நீதிபதிகள் அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு

கடவுச்சீட்டு ஒருபோதும் குடியுரிமை ஆவணமாக கருதப்படவில்லை: மத்திய அரசு

சட்டத் துறையில் பெண்களுக்கான வாய்ப்புகள் போதாது: உச்சநீதிமன்றம்







