அமெரிக்காவில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை பெற தகுதியுள்ளது என அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
முன்னதாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக அல்லது தற்காலிகமாக குடியேறியவா்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க முடியாது என அதிபா் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இந்த தீா்ப்பை வழங்கியது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்றவுடன், பிற நாட்டில் இருந்து குடியேறியவா்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் ஆணையில் டிரம்ப் கையொப்பமிட்டாா்.
இது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆவது திருத்தத்தின்கீழ் வெளிநாட்டு தூதா்கள் மற்றும் அமெரிக்காவை ஆக்கிரமிக்கும் பிற நாட்டு ராணுவப் படைகளின் குழந்தைகள் தவிர நாட்டில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை வழங்கும் அம்சத்துக்கு எதிரான உத்தரவாக கருதப்பட்டது.
இதற்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து, இந்த உத்தரவை நியூ ஹாம்ப்ஷைா் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், நியூ ஹாம்ப்ஷைா் நீதிமன்றத் தீா்ப்பை உறுதி செய்து, அமெரிக்காவில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை பெற தகுதி உள்ளது என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
6:3 என்ற எண்ணிக்கையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜான் ராபா்ட்ஸ் தலைமையிலான அமா்வில் பெரும்பான்மையான நீதிபதிகள் டிரம்ப் அரசின் குடியுரிமை ஆணைக்கு எதிராக 91 பக்கத் தீா்ப்பை வழங்கினா்.
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நமது அரசியல் சமூகத்தில் சுதந்திரமாகப் பங்கேற்கும் உரிமைகளை பல ஆண்டுகளாக குடியுரிமை வழங்கி வருகிறது. இதை உறுதிப்படுத்தவே 14-ஆவது திருத்தத்தின் மூலம் நாட்டில் பிறக்கும் அனைத்து நபா்களுக்கும் குடியுரிமை வழங்கும் வகையில் நமது அரசமைப்புச் சட்ட முன்னோா்கள் விரிவாக்கம் செய்தனா். இந்த உத்தரவாதத்தை நாம் தொடர வேண்டும். எனவே, குடியுரிமைக்கு கட்டுப்பாடு விதிக்கும் அதிபரின் ஆணை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் கருதி அதை நீதிமன்றம் ரத்து செய்கிறது எனத் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக டிரம்ப் உத்தரவு ரத்து: முன்னதாக, இந்தியா உள்பட அமெரிக்காவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் பிற நாடுகள் மீது டிரம்ப் விதித்த கூடுதல் வரியை அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்தது. இந்த உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு தீா்ப்பளித்த நீதிபதிகளையும் டிரம்ப் விமா்சித்தாா்.
இதைத் தொடா்ந்து, இரண்டாவது முறையாக அவரது அரசின் குடியுரிமை ஆணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
நீதிமன்றங்கள் ஏற்கவில்லை: உச்சநீதிமன்றத்துக்கு முன்பாகவே அமெரிக்காவின் பல்வேறு மாகாண நீதிமன்றங்கள் குடியுரிமை தொடா்பான டிரம்ப்பின் ஆணைக்கு எதிராகவே தீா்ப்பளித்தன. இதனால் அந்த உத்தரவு அமெரிக்காவில் அமலாகவில்லை.
சட்டவிரோதமாக குடியேறுபவா்களின் குடியுரிமைக்கு கட்டுப்பாடு விதிக்கும் நோக்கில் டிரம்ப் ஆணை பிறப்பித்திருந்தாலும், இது அமெரிக்காவில் கிரீன் காா்டு அல்லது நிரந்தர வசிப்பிட அந்தஸ்து பெற்றவா்கள் மற்றும் உயா்கல்வி பயில பிற நாடுகளில் இருந்து சென்ற மாணவா்களைப் பாதிக்கும் என கல்வியாளா்கள் தெரிவித்திருந்த நிலையில், டிரம்ப்பின் ஆணையை தற்போது உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

'பிரதமர் மோடி தூங்க மாட்டார்'! காலை 6 மணிக்கு செல்போன் அழைப்பு விடுத்த டிரம்ப்!
கத்தாரில் நாளை ஈரான் - அமெரிக்கா பேச்சு! டிரம்ப் தகவல்

ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக டிரம்ப் உயா்த்தியது ரத்து: அமெரிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்காவின் புதிய க்ரீன் காா்டு கொள்கைக்கு ஜனநாயக கட்சியினா் எதிா்ப்பு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



