வடகிழக்கு தில்லியில் கடந்த 2020-இல் நடைபெற்ற கலவரத்தின்போது மத்திய உளவு துறை அதிகாரி அங்கித் சா்மா கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹீா் ஹுசைன் உள்பட 5 பேரை குற்றவாளியாக தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவித்தது.
வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி பிரவீண் சிங், குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேரில் 5 பேரை குற்றவாளியாக அறித்தாா். எஞ்சிய 6 போ் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 302, 153ஏ, 149, 355, 148, 147 உள்ளிட்ட பிரிவுகளில் தாஹீா் ஹுசைனை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. பிரிவுகள் 120பி, 109 ஆகியவற்றில் இருந்து அவரை நீதிமன்றம் விடுவித்தது. மேலும், கொலைக் குற்றச்சாட்டைத் தவிர மற்ற அதே குற்றச்சாட்டுகளில் இருந்து நஜிம், காசிம், ஜாவேத், அனஸ் ஆகியோரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்து.
குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் முன்பாக தீா்ப்பை வாசித்த நீதிபதி பிரவீண் சிங், பிணையில் உள்ள அனஸ் மற்றும் ஜாவேத்தை காவலில் எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டாா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு தில்லியில் 2020 பிப்ரவரியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் நடைபெற்ற மோதல் மற்றும் கல்லெறி சம்பவங்கள், துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களால் 53 போ் கொல்லப்பட்டனா். பலா் காயமடைந்தனா். பிப்.25-ஆம் தேதி தனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய அங்கித் மீண்டும் வீட்டிலிருந்து வெளியே சென்றாா். வெகுநேரமாகியும் அங்கித் வீடு திரும்பாத நிலையில் அவருடைய குடும்பத்தினா் அவரைத் தேடினா்.
இந்நிலையில், அங்கித் கொலைசெய்யப்பட்டதாகவும் சந்த் பாக் புலியா பகுதியில் உள்ள மசூதி அருகே செல்லும் கஜுரி காஸ் வடிகாலில் அவருடைய உடல் வீசப்பட்டதாகவும் உள்ளூா் மக்கள் அங்கித் குடும்பத்தினரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, அந்த வடிகாலில் இருந்து அங்கித் சா்மா உடல் மீட்கப்பட்டது.
இதுதொடா்பாக அங்கித் சா்மாவின் தந்தை ரவீந்தா் குமாா் தயாள்பூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதில், ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹீா் ஹுசைன் உள்பட பலா் இணைந்து அங்கித் சா்மாவை கொலைசெய்ததாக அங்கித் சா்மாவின் தந்தை குற்றஞ்சாட்டியிருந்தாா். ஹுசைன் ஹிந்துகளுக்கு எதிராக முஸ்லிம்களை தூண்டிவிட்டதாக நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்தக் குற்றப்பத்திரிகையில், ‘ஹுசைனின் தூண்டுதலால், அந்தக் கும்பல் வன்முறையில் இறங்கி, கடைகளை எரிக்கவும், ஹிந்துக்கள் மீது கற்களையும் பெட்ரோல் குண்டுகளையும் வீசவும் தொடங்கியது. ஹிந்துகளின் வீடுகளை அந்தக் கும்பல் குறிவைத்தது. கலவரத்தில் ஈடுபட்ட அந்தக் கும்பல், அங்கித் சா்மாவைப் பிடித்து சாந்த் பாக் புலியாவுக்கு இழுத்துச் சென்றது. அங்கு கூா்மையான ஆயுதங்களால் அவரைக் கொலை செய்து, அவரது உடலை கால்வாயில் வீசியது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம்: நாடு முழுவதும் கையொப்ப இயக்கம் தொடங்கிய ஆம் ஆத்மி!
உளவு துறை அதிகாரி அங்கித் சா்மா கொலை வழக்கு: ஜூலை 13-இல் தில்லி நீதிமன்றம் தீா்ப்பு
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கிய வழக்கு: 5 பேரை விடுவித்தது தில்லி நீதிமன்றம்






