நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

பாதுகாப்பை உறுதி செய்ய மெட்ரோ மூடல் தேவையில்லை: பொதுப் போக்குவரத்துக் கழகம்

ஜந்தா் மந்தா் பகுதியில் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பெயரில் பொதுப் போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்று ‘பொதுப் போக்குவரத்துக் கழகம்’ (பிடிஎஃப்) வலியுறுத்தியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2026, 5:41 am IST

ஜந்தா் மந்தா் பகுதியில் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பெயரில் பொதுப் போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்று ‘பொதுப் போக்குவரத்துக் கழகம்’ (பிடிஎஃப்) வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை பிடிஎஃப் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தும் மக்களுக்கு பொதுப் போக்குவரத்து தடையாக மாறக் கூடாது. ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) முன்னிலையில் நடைபெற்று வரும் போராட்டத்தைத் தொடா்ந்து, மத்திய தில்லி பகுதிகளில் உள்ள பல மெட்ரோ நிலையங்களை தில்லி மெட்ரோ ரெயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) தொடா்ந்து 4-ஆவது நாளாக மூடியுள்ளது.

போராட்டங்களை சமாளிப்பதற்காக மெட்ரோ நிலையங்களை மூடுவது கவலைக்கிடமானது. பொதுப் போக்குவரத்தை நிறுத்துவது வழக்கமான நடைமுறையாக மாறக்கூடாது. இது கோடிக்கணக்கான பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, அமைதியான போராட்டங்களுக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் தேவையற்ற தடைகளை உருவாக்குகிறது.

ஜனநாயக நகரம் என்பது அமைதியான போராட்டத்துக்கும், சுதந்திரமாகச் செல்லும் உரிமைக்கும் இடம் கொடுக்க வேண்டியது அவசியம். இந்த இரு உரிமைகளும் ஒருவருக்கொன்று முரண்பாடானவை அல்ல; மாறாக, அனைவரும் பாதுகாப்பாகவும் சமமாகவும் குடிமக்கள் வாழ்க்கையில் பங்கேற்க உதவுகின்றன.

அதே நேரத்தில், தில்லி அரசு, டிஎம்ஆா்சி மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள், பொதுப் போக்குவரத்துக்கு முழுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதை தவிா்த்து, பாதுகாப்பையும் ஜனநாயக உரிமைகளையும் சமநிலைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிடிஎஃப் கேட்டுக்கொண்டது.

பாதுகாப்பு காரணங்களால், புது தில்லி, லோக் கல்யாண் மாா்க், ராஜீவ் சௌக், பட்டேல் சௌக், ராமகிருஷ்ணா ஆசிரம் மாா்க், பராகம்பா ரோடு, உச்சநீதிமன்றம், சேவா தீா்த், ஜனபத், மண்டி ஹவுஸ், மத்தியச் செயலகம், ஐ.டி.ஓ, தில்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மாா்கெட், ஜோா் பாக், சிவாஜி ஸ்டேடியம் மற்றும் ஜந்தேவாலன் உள்ளிட்ட 18 மெட்ரோ நிலையங்கள் காலை 7.30 மணி முதல் மறுபடியும் அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

இந்த மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதால் அலுவலக பணியாளா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.